உலகிலேயே அழகானவள் உங்கள் அம்மா தாங்க! – அம்மாவை நேசிப்போருக்கான பதிவு!

Share this post:

amma

ஒவ்வொரு முறையும் மகன் கீழே விழும் போதும், உற்சாகம் அடையும் போது, ஆசுவாசப்படும் போதும் கூறும் ஒரே வார்த்தை அம்மா… அம்மாவை வெறுக்கும் குழந்தைகள் இருக்கலாம். ஆனால், குழந்தையை வெறுக்கும் அம்மாக்கள் இவ்வுலகிலேயே இல்லை. அப்படி வெறுப்பவர்கள் அம்மாவாகவே இருக்க முடியாது.

ஒரு மகனின் முதல் காதலி, தோழி, செல்லத்திற்கு உரியவள். முதல் முத்தம் கொடுத்தவளும், பெற்றவளும் அம்மா தான். எந்த ஒரு விஷயமோ, பொருளோ நம்மிடம் இருக்கும் வரை அதன் அருமை தெரியாது, நாம் தொலைத்த பிறகோ, இழந்த பிறகோ தான் வருந்துவோம். ஆனால், அம்மாவை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும், வாழ்க்கையின் அருமை!!

பழியை ஏற்றுக் கொள்ளும் குணம் :

நீங்கள் எந்த சேட்டை செய்தாலும், குறும்பு செய்தாலும், அப்பாவிடம் இருந்து காப்பாற்ற பழியை தன் மீது சுமத்திக் கொண்டு காப்பாற்றும் ஒரே ஆள் அம்மா தான்.

உறக்கம் தொலைப்பவள் :

உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும், உடல்நலம் சரியில்லை என்றாலும், உங்களோடு சேர்த்து தனது உறக்கத்தையும் தொலைப்பவள் தாயாக மட்டும் தான் இருக்க முடியும்.

கவலையை பங்கிட்டுக் கொள்ளும் ஜீவன் :

எந்த உறவாக இருந்தாலும் உங்கள் சந்தோசத்தில் மட்டும் தான் முழுமையாக பங்கேடுத்துக் கொள்வார்கள். ஆனால், உங்கள் தோல்வியிலும், துன்பத்திலும் பங்கேடுத்துக்கொள்பவள் தாய் தான்.

உடலை வருத்திக் கொள்பவள் :

நீங்கள் சரியாக யோசித்து பாருங்கள், உங்களுக்கு காய்ச்சல் சரியான மறுநாள் உங்கள் அம்மாவிற்கு காய்ச்சல் வந்திருக்கும். உங்கள் உடல்நலனுக்காக தனது உடல்நலத்தை பற்றி கொஞ்சமும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை அம்மா

மன்னிக்கும் குணம் :

எத்தனை தவறுகள் செய்தாலும், மீண்டும் மீண்டும் மன்னிக்கும் குணம் உடையவள் அம்மா மட்டும் தான். அதற்கு காரணம், மறுமுறை இந்த தவறை தன் மகள் செய்யமாட்டாள்என்று அவள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.

அழுகையை போக்கும் மந்திரவாதி :

ஓர் அரவணைப்பில் உங்கள் மொத்த அழுகையையும் போக்கும் ஒரே ஆள் அம்மா தான். எந்த வைத்தியமும் அம்மாவின் கட்டிப்பிடி வைத்தியத்திற்கு நிகரானது அல்ல.

அவசரத்தில் உதவும் வங்கி :

எப்போது கேட்டாலும், கடைசி நொடியில் கேட்பினும் கூட உடனடியாக பணம் தரும் ஒரே வங்கி அம்மா தான். நீங்கள் சொல்வது பொய்யென தெரிந்தும் பணம் தருபவள் அம்மா!!!

பசியாற்றும் தேவதை :

நீங்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அவசரத்தில் இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு போக சொல்லும் ஒரே உறவு அம்மாவாக தான் இருக்க முடியும். வெளியூர் சென்று வந்ததும் என்ன வாங்கி வந்தாய் என்று விசாரிக்கும் உறவுகளுக்கு மத்தியில் “சாப்பிட்டியாடா… ஊர்ல சாப்பாடெல்லாம் நல்ல இருந்துச்சா..” என்று கேட்கும் ஒரே உறவு தான் அம்மா!!

குறையாத காதல் :

நாளுக்கு நாள் உங்கள் மேல் வைத்திருக்கும் காதலை அதிகரித்துக் கொண்டே போகும் ஜீவன் அம்மா!!! யாருடன் சண்டையிட்டாலும், சாப்பிடாமல் காத்திருக்கும் உறவு அம்மா.

பெருமை :

உங்கள் வெற்றியில் உங்களை விடவும் அதிகம் பெருமிதம் கொள்ளும் உயிர் அம்மா. உங்கள் தோல்வியை துடைத்தெடுக்கும் அம்மா, உங்களை விடவும் அதிகமாய் உங்கள் தோல்வியை கண்டு துக்கம் கொள்பவள்!

ருசி!! :

அம்மாவின் சமையலுக்கு முன்னாள் எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலும் நிகராகாது. ஏன் மேலோகதின் தேவாமிர்தம், அம்மாவின் ரசம் சாதத்திற்கு கூட இணையாகாது.

புன்னகை :

உங்கள் முகத்தில் பூக்கும் புன்னகையைக் கண்டு ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடையும் உயிர் அம்மா!! தன்னுயிரில் இருந்து உங்களை ஊனளவில் மட்டும் பிரித்தெடுத்து, உயிரளவில் தான் சாகும் வரை பேணிக் காக்கும் உறவு தான் அம்மா!!

Share This:
Loading...

Related Posts

Loading...