மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி ?

Share this post:

neraqm

வேலை உலகம் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. வேலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திறமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலதிகாரி/ முதலாளியின் நன்மதிப்பை பெறுவது அவற்றில் முக்கியமானது. அதற்கு என்ன வழி? சில டிப்ஸ்…

திறமை :

மேலதிகாரியிடம் பணித்திறமையின் மூலமும், சிறந்த உரையாடல் திறன் மூலமும் நன்மதிப்பை பெறலாம். நீங்கள் திறமை மிக்க பணியாளராக இருந்தாலும், அவசியமற்ற சொற்களைப் பேசி, உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

என்னால் முடியாது :

மேலதிகாரி உங்கள் திறமையை சோதிக்கும் பொருட்டு கூடுதல் பணிகளையும், திடீர் பணிகளையும் உங்களுக்கு வழங்கலாம். அல்லது புதிய விஷயங்களைப் பற்றி உங்களிடம் கலந்துரையாடலாம். அந்த நேரத்தில் ‘அது எனக்குத் தெரியாது, இந்த வேலையை என்னால் செய்ய முடியாது’ என்று எதிர்மறையாக பதிலளிக்கக் கூடாது.

‘‘நிச்சயமாக செய்யலாம். எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள், எப்படி சிறப்பாக செய்வது என்று திட்டமிட்டுச் சொல்கிறேன்’’ என்று பதிலளிக்க வேண்டும். நிஜமாகவே அந்தப் பணியால் உங்களுக்கு சுமை கூடினாலும், இப்படி பதிலளிப்பதால் மேலதிகாரிக்கு உங்கள் மீது மதிப்புகூடும். பிறகு அந்தப் பணியின் நிறைகுறைகளை கூறலாம்.  தேவையான உதவிகளை கோரி பெற்றுக் கொள்ளலாம்.

எனக்கு நேரமில்லை:

மறுப்பு தெரிவிப்பதன் மறுவடிவமே ‘எனக்கு நேரமில்லை’ என்னும் பதிலாகும். மேலதிகாரியிடம் இப்படிச் சொல்வதால் ‘முக்கியமான பணியைக்கூட செய்ய மறுக்கிறாரே’, என்று உங்களைப் பற்றிய எதிர்மறை கருத்தை ஏற்படுத்தலாம். அதுவே மனகசப்பை உருவாக்கி உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் தள்ளிப்போக காரணமாகலாம்.

‘‘எனக்கு வேறுவேலை கிடைக்கும்’’ :

தவறுகளுக்காக மேலதிகாரி கண்டிக்கும்போதோ அல்லது திருப்தி இல்லாத வேலைச்சூழலின்போதோ, ‘‘எனக்கு இந்த வேலை வேண்டாம்’’ ‘‘நான் என்ன அடிமையா?’’ என்பது போன்று வேலையை எடுத்தெறிந்து பேசுவது, மேலதிகாரியின் கோபத்திற்கும், கடும் நடவடிக்கைக்கும் வழிவகுக்கும். வேலைச்சூழலை மாற்ற விரும்பினால்கூட கண்ணியமான முறையில் பேச வேண்டும்.

‘‘அது என் தவறல்ல, அவருடையது’’ :

பணியில் தவறு ஏற்படும் சமயங்களில், ‘அது என்னுடையதல்ல, அவர்தான் இதற்கு பொறுப்பு’ என்று தன்னுடன் பணியாற்றும் சகபணியாளரை கைகாட்டுவது உங்கள் மதிப்பை பாதிக்கும். ஒரு விஷயத்தை பொறுப்பு ஏற்று செயல்படுத்த முடியாதவர் என்று எண்ண வைத்துவிடும்.தவறை கண்டறிந்து திருத்திக் கொள்வதாக கூறலாம்.

‘‘அவர் அப்படிப்பட்டவர்’’ :

எப்போதுமே தன்னுடன் பணி புரிபவர் அல்லது வாடிக்கையாளர், விற்பனையாளர் ஆகியோரைப் பற்றி மேலதிகாரியிடம் மதிப்பு குறைத்து கூறக்கூடாது. ‘அவனுக்கு ஒன்றும் தெரியாது’என்பதுபோல புறம்பேசுவது, தரம் தாழ்த்தி விமர்சிப்பது தவறாகும். இது ‘நீங்கள் எப்போதுமே பணியைத் தவிர்த்து இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துபவர்’ என்ற எண்ணத்தை மேலதிகாரிக்கு உருவாக்கும்.

– மேற்காணும் விஷயங்களை கவனத்தில் கொண்டால் மேலதிகாரியின் மதிப்பை பெறுவதோடு, உங்கள் பணியிலும் உயர்வு பெறலாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...