படுக்கையில் நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாத 6 விஷயங்கள்

Share this post:

girl

உடலுக்கு வேண்டிய போதிய ஓய்வானது தூக்கத்தின் மூலம் தான் கிடைக்கிறது. அத்தகைய தூக்கம் இன்றைய நவீன உலகில் பலருக்கு கிடைப்பதில்லை. அப்படி தூங்க கிடைக்கும் நேரத்திலும் பல தூக்கத்தைக் கெடுக்கும் விஷயங்களில் ஈடுபட்டு, இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்படுகின்றனர். உதாரணமாக, வீட்டிற்கு வந்தும் அலுவலக வேலையை படுக்கையில் செய்வது, விவாதத்தில் ஈடுபடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கு படுக்கைக்கு போகும் முன் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து இனிமேல் செய்யாதீர்கள்.

வீடியோ கேம்ஸ்
சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்று படுக்கையில் படுத்துக் கொண்டே வீடியோ கேம்ஸ் விளையாடுவார்கள். ஆனால் இப்படி இரவில் படுக்கும் முன் வீடியோ கேம்ஸ் விளையாடும் போது, உடலில் அட்ரினலின் அளவு அதிகரிப்பதோடு, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவும் அதிகரித்து, தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே தூங்க செல்லும் 2 மணிநேரத்திற்கு வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள்.

அலுவலக வேலை
அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும், அதனை படுக்கையில் வைத்து செய்யாதீர்கள். அந்த வேலை முக்கியமாக இருந்தால், ஹாலில் வைத்து செய்யுங்கள். ஏனெனில் படுக்கையில் அலுவலக வேலையை செய்வதன் மூலம், தூங்கும் போதும் மனமானது அந்த வேலையைப் பற்றியே சிந்திக்க நேரிட்டு, அதன் காரணமாக தூக்கத்தை தொலைக்க நேரிடும்.

விவாதங்கள்
திருமணமான தம்பதியர்கள் அல்லது காதலர்கள் எப்போதுமே படுக்கையில் அமர்ந்து கடுமையான விவாதங்களில் ஈடுபடக்கூடாது. எப்பேற்பட்ட முக்கியமான விவாதமாக இருந்தாலும், படுக்கையறைக்கு வெளியே வைத்து முடித்துக் கொண்டு, பின்பே படுக்கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், அது அன்றைய தூக்கத்தை பாழாக்கி, மறுநாள் மிகுந்த சோர்வுடன் நாளை தொடங்க நேரிடும்.

போன்
படுக்கைக்கு கொண்டு வரக்கூடாத பொருட்களில் ஒன்று மொபைல் போன். எப்போதுமே இந்த போனை படுக்கும் மெத்தைக்கு சற்று தொலைவிலேயே வைக்க வேண்டும். ஏனெனில் போனில் எரியும் நீல நிற வெளிச்சம் மற்றும் அதிலிருந்து வெளிவரும் கதிர்கள் தூக்கத்தைப் பாதிக்கும். மேலும் இக்காலத்தில் பலருக்கும் சரியான தூக்கம் கிடைக்காமல் போவதற்கு இந்த போனை அதிகமாக பயன்படுத்துவதும் ஒரு காரணம்.

உணவுகள்
படுக்கையில் அமர்ந்து கொண்டே உணவை உட்கொள்வது என்பது சற்று நன்றாக இருந்தாலும், இப்படி படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் போது, உணவுகள் படுக்கையில் சிந்தி, அதனால் படுக்கை அசுத்தமாகி, பூச்சிகள் வரும். இதனால் தூக்கம் பாழாகும். எப்போதுமே ஓய்வெடுக்கும் அறை புனிதமான ஓர் இடம். அதை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொண்டால் தான், நன்மை பெற முடியும்.

பேய் படம் வேண்டாம்
இரவில் பேய் படம் பார்க்க வேண்டாம். இப்படி பார்ப்பதால், இரவில் தூக்கம் களைந்துவிடும். அதுவும் முக்கியமாக உடலில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தை இழக்க நேரிடும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...