யாழில் சாமி ஆடியபடி கிணற்றினுள் இறங்கிய குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!

Share this post:

ssa

சாமி ஆடிய நிலையில் கிணற்றுக்குள் இறங்கிய குடும்பஸ்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழ். வறுத்தலைவிளான் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இணுவில், காரைக்கால் முகாமைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான தாசன் உதயபாலு (வயது-44) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வறுத்தலை விளான் பகுதியில் உள்ள அன்னம்மார் கோவிலுக்கு மேற்குறித்த நபரும் அவருடைய தாயாரும் நேற்றைய தினம் நண்பகல் சென்றுள்ளனர்.

குறித்த நபருக்கு பிற்பகல் 2.45 மணியளவில் சாமி உருவேறிய போது கோவிலுக்கு அருகில் இருந்த 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

சுற்றி இருந்தவர்கள் அவரை இறங்க விடாது தடுத்த போது தனது உடலில் கயிற்றை கட்டியவாறு கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

சற்று நேரத்தின் பின்னர் கிணற்றில் இறங்கியவரை தரையில் இருந்தவர்கள் பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இருவர் கிணற்றுக்குள் இறங்கி அவரை காப்பாற்ற முயற்சித்து கிணற்றுக்குள் இறங்கிய போது கிணற்றின் இடைப் பகுதியில் அவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதில் அவர்கள் மீண்டும் மேலே வந்துள்ளனர்.

பின்னர் யாழ் மாநகரசபைக்கு அறிவித்து தீயணைப்பு படையினர் வந்து மீட்புப் பணிக்காக கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். அவர்களுடைய முயற்சியும் தோல்வியுற்ற நிலையில் கடற்படையினர் அவ்விடத்துக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

கடற்படையினர் ஒட்சிசன் சிலிண்டர் பொருத்திய நிலையில் கிணற்றுக்கள் இறங்கி குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த கிணற்றில் அரை அடிக்கு மாத்திரமே தண்ணீர் உள்ளது என்றும் ஆனால் ஒட்சிசன் இல்லாத காரணத்தினாலே அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...