சயனைட் குப்பிகளுடன் திரிந்த தமிழ் இளைஞர்களை பேனாவுடன் நடமாட வைத்துள்ளேன்!- மஹிந்த ராஜபக்ஷ

Share this post:

ma

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

அங்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது விகாரையின் வளாகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தாங்கிய புதுமதுர கட்டடம், முன்னாள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு அங்கு வழிபாடும் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் பௌத்த மதகுருமார்கள், இன்னாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வுகளில் பொலிசாரும், விஷேட அதிரடிப்படையினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அங்கு உரையாற்றுகையில்,

நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து நாட்டை சீரழிக்க முற்படுகின்றனர்’ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

யுத்தத்தினால் உயிரிழந்த படை வீரர்களுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,

நாட்டில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த மிகவும் பயங்கரமான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதே போன்று, ஆலயங்களிலும் பௌத்த விகாரைகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றதுடன் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியிருக்கவில்லை. ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்வதவதற்கு அச்சப்பட்டனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் வருவதற்கு அச்சப்பட்டனர்.

இந்த நிலையை மாற்றி அனைவரும் சுதந்திரமாக இருக்க கூடிய நிலைமையை மாற்றியமைத்தேன்.மிகக்குறுகிய காலத்தினுள் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.

எனது அபிவிருத்தியைப் பார்த்து ஆச்சரியமைடைந்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையை பாருங்கள்.

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மக்களின் ஆணையைக் கோருவதற்காக தேர்தலை நடாத்துவோம் என்றவர்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இது மக்களுக்கு இவர்கள் செய்யும் பெரிய அநியாயமாகும்.12,000 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து அவர்களை விடுவித்துள்ளேன்.

ஆயுதங்களுடன், சயனைட் குப்பிகளுடன் நடமாடிய தமிழ் இளைஞர்களை இன்று பேனாவுடன் நடமாட வைத்துள்ளேன்.

இன்று பாதுகாப்பு படை வீரர்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கின்றனர் என்றார்.

Share This:
Loading...

Related Posts

Loading...