23 படங்களில் எது வெற்றி ? – செப்டம்பர் மாதப் படங்கள் ஓர் பார்வை..!

Share this post:

ir

2016ம் ஆண்டின் 4ல் 3 பங்கு கடந்து விட்டது. செப்டம்பர் மாதத்துடன் இந்த ஆண்டின் முக்கால் வருடத்தைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் அந்த மாதத்துடன் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையும் 160ஐத் தாண்டிவிட்டது.

செப்டம்பர் மாதத்தில் அதிக அளவில் அதாவது 23 படங்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு ஏப்ரல் மாதத்திலும் 23 படங்கள் வெளிவந்திருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு படங்களாவது வந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் வரவேற்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும், அவற்றில் எத்தனை படங்கள் வெற்றி பெறுகிறது என்பதைப் பார்த்தால் கவலைதான் மிஞ்சும். அது செப்டம்பர் மாதத்திலும் தொடர்கிறது.

செப்டம்பர் மாதம் 2ம் தேதி “கிடாரி, குற்றமே தண்டனை, தகடு, இளமை ஊஞ்சல்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ‘கிடாரி’ படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படமாக அமைந்ததாகச் சொல்லப்பட்டது. அந்தப் படமும் ஒரு வாரம் மட்டும்தான் முழுமையாகத் தாக்குப் பிடித்தது. அதற்குள் போட்ட பணத்தை எடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் வந்த ‘குற்றமே தண்டனை’ படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது. ‘தகடு, இளமை ஊஞ்சல்’ ஆகிய இரண்டு படங்களும் இரண்டு காட்சிகளாவது ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.

செப்டம்பர் 8ம் தேதியன்று “இருமுகன், வாய்மை” ஆகிய படங்கள் வெளியாகின. விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்த ‘இருமுகன்’ படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே ஓடியது. முற்றிலும் கமர்ஷியல் படமாக இருந்ததாலும், போட்டிக்கு வேறு எந்தப் படங்கள் இல்லாததாலும் ‘இருமுகன்’ நல்ல வசூலைக் கொடுத்தது. படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைத்ததாக வினியோக வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள். ‘வாய்மை’ படம் அவ்வளவு நடிகர்கள் நடித்தும் ஒரு நாடகம் போல அமைந்த திரைப்படமாகவே இருந்தது.

செப்டம்பர் 9ம் தேதி ‘புதுசா நான் பொறந்தேன்’ படம் வெளியானது. கலாபவன் மணி தமிழில் கடைசியாக நடித்த படம் என்ற ஒரு பதிவு மட்டும் இந்தப் படத்திற்குக் கிடைத்தது.

செப்டம்பர் 16ம் தேதி ”கர்மா, பகிரி, நாயகி, சதுரம் 2, உச்சத்துல சிவா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் த்ரிஷா நடித்த ‘நாயகி’ படத்தைப் பற்றி அவரே பேச முன் வராததால் மற்றவர்களும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசவில்லை. ‘பகிரி’ நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தது. ‘சதுரம் 2’ படம் ஒரே அறைக்குள் அதிக காட்சிகள் இருந்ததால் போரடித்தது. கரண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘உச்சத்துல சிவா’ முதல் படியே ஏறவில்லை. ‘கர்மா’ படம் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 22ம் தேதி தனுஷ் நடித்த ‘தொடரி’ படம் வெளியானது. பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்ததால் இந்தப் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயிலில் நடக்கும் கதை என்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால், வலுவில்லாத கதையும், சினிமாத்தனமான காட்சிகளும் ‘தொடரி’க்கு ‘ரெட் சிக்னல்’ ஆக அமைந்தது.

செப்டம்பர் 23ம் தேதி ‘ஆண்டவன் கட்டளை, ஒறுத்தல், மதுரக்காரங்கே’ ஆகிய படங்கள் வெளியாகின. விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. ஆனால், வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தவில்லை. மணிகண்டன் இயக்கிய ‘குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை’ ஒரே மாதத்தில் வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று. ‘ஒறுத்தல், மதுரக்காரங்கே’ இந்த ஆண்டின் பட எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள்.

செப்டம்பர் 30ம் தேதி ‘கள்ளாட்டம், கொள்ளிடம், மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா, நுண்ணுணர்வு, திருமால் பெருமை, ஆசி’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்தத ஆறு படங்களும் 2016ம் ஆண்டின் பட எண்ணிக்கையை 160ஐக் கடக்க உதவியுள்ளன.

செப்டம்பர் மாதம் வெளியான 23 படங்களில் ‘இருமுகன்’ படம் மட்டுமே வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படமாக அமைந்தது. ‘கிடாரி’ படம் சுமார் வெற்றிப் படமாக அமைந்தது. “தொடரி, ஆண்டவன் கட்டளை” பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரிப்புச் செலவில் பாதியையாவது வசூலித்த படங்களாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

இந்த அக்டோபர் மாதத்தில் தீபாவளியும் வெளிவருவதால் இந்த மாதம் அமர்க்களமான மாதமாகவே இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...