தமிழகச் சகோதரனுக்கு இலங்கைத் தமிழனின் இணைய மடல்!! அவசியம் முழுவதும் படிக்கவும்..!

Share this post:

aas

அன்புச் சகோதரனே!

காவிரி நீரைத் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்வைத் தந்தது. எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நீர் கிடைக்கும்: விளை நிலங்கள் செழிக்கும்: விவசாயிகளின் ஏழ்மையும் தற்கொலை வீதமும் குறையும் என்ற மகிழ்ச்சிதான்.

அடுத்து கன்னடத்தில் கலவரம்: தமிழ் பதாகைகள் கொண்ட வியாபார நிலையங்கள் பேரூந்துகள் அத்தனையும் சேதம்: தமிழர்களைத் தேடித்தேடி அடி: போன்ற செய்திகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்றன. இருக்காதா என்ன? முள்ளிவாய்க்கால் சோகம் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது.

எண்ணற்ற உயிர்ச்சேதம், தியாகம் அத்தனைக்கும் முடிபு கிடைக்கவில்லை. உரிமை கேட்டுக் களமாடி உயிரை மாய்த்த உன்னதர்களின் கனவுகள் சாம்பலானது. இப்படியிருக்கையில் தண்ணீர் கேட்டுத் தொடர்ந்த வழக்கு வெற்றிபெற்றால் மட்டும் தண்ணீர் கிடைத்திடுமா என்ன? சகோதரா! தமிழனாய்ப்பிறந்ததால் இன்னமும் என்னென்ன அனுபவிக்க வேண்டுமோ? இதற்கு காரணமான நமது ஒற்றுமைக் குறைவு எம்மை எந்த அளவுக்கு வேதனைப் படுத்துகிறது என்று உணர்ந்து கொள்வாயா? தொப்புள்கொடி உறவு நாங்கள் என்று நீதான் எமையழைத்தாய். அந்த உறவுகள் இறுதியுத்தத்தின் போது உன்னை நோக்கி ஓலமிட்டதனை நீ ஞாபகப்படுத்திப் பார்.

அந்த நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சூடுபிடித்திருந்ததனால் அதனோடு நீ மெய்மறந்து போனாய் போலும், எம் சகோதரிகள் தமிழகத்து சின்னத்திரையின் கற்பனைக் காவியங்களுக்காகக் கண்ணீர் சிந்தியதால் எம் கதறல்கள் கேட்டிருக்க வாய்ப்புக்கள் இருந்திருக்கவில்லை போலும். அன்றில் புரட்சியும் போராட்டமும் தமிழ் திரையிலக்கியங்களுக்கு மட்டும் தான் பொருந்துமென்று நினைத்தாயோ என்னவோ? இந்தச் சூழலில்தான் அண்ணன் முத்துக்குமாரன் தீக்குளித்தான். அப்போதும் அத்தீ உன்னைச் சுட்டிருக்கவில்லை.

அவ்வப்போது நடைபெற்ற உண்ணாவிரதம், சாலைமறியல், மாணவர்கள் பகிஸ்கரிப்பு, மனிதச்சங்கிலிப் போராட்டம் யாவும் சமூக வலைத்தளங்களை அலங்கரித்தன. தமிழ்ச் சமூகத்திற்கு ஏன் பயனற்றுப் போனதென அறிவாயா?

அரசியல் பலம் உன்னை சிந்திக்க விடவில்லை. அம் மாயை உன்னை நீயே ஒளிந்து கொள்ளச் செய்தது. அன்றொருநாள் நிகழ்ந்த உண்ணாவிரதமும் உன் மத்திய அரசின் அறிவிப்பும் கூட உன்னைச் செயற்படத் தூண்டவில்லை. எம் கண்ணீர் கதறலுக்கும் பாக்கு நீரிணைக்கும் உன்னால் வேறுபாடு காண முடிந்திருக்கவில்லையோ யாமறியோம்.

இப்பினும் நாம் மறந்துவிட்டோம். என்றைக்கும் நீ கூறிய தொப்புள் கொடி உறவுகள் தான் நாங்கள். நாதியற்ற நாம் உனக்காக ஏதும் செய்ய இயலாது. உன் நாடு ஜனநாயக நாடு என்று புகழ்கொண்டது. எனவே உன்னை உசுப்பிவிட முடியும். விழித்தெழு! உன் முப்பாட்டனும் காவிரித் தாயின் முலை பருகி வளர்ந்தவன் என்பதனை அனைத்து மாநிலங்களும் உணரச் செய், உனக்கும் உரிமை உண்டென்று உரத்துச் சொல், புறப்படு! புறநானூற்றின் வீரத்தைப் புரட்டிப்பார்ப்பதை நிறுத்தி விட்டு உலகுக்கு உணர்த்த வேண்டாமா? தலையிடு! அரசியல் தலைவர்களின் அசமந்தப்போக்கினைத் திசை திருப்ப வேண்டாமா?

ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும். உன் போராட்டம் அண்டை மாநிலத்தில் வாழும் உன் சகோதரர்களைப் பாதித்து விடக்கூடாது. எனவே வன்முறை வேண்டாம்! அதற்காக உன் போராட்டத்தின் வலிமையைக் குறைத்துவிடாதே. வெறுமனவே வந்தாரை வாழவைத்து தம் வாழ்வைத் தொலைத்த எம் பாட்டன்கள் போல் இருந்து விடக்கூடாது. வாழ்வை உன் மாநிலத்தில் பிழைக்க வந்த கன்னடர்களைப் பாதுகாத்து உன் பண்பாட்டையும் வாழ வை.

சந்தர்ப்பவாதிகளுக்கும், பொதுநலவாதிகளாகத் தம்மை வெளிக்காட்ட நினைப்பவர்களுக்கும், அசட்டு அரசியலுக்கும் அடிபணிந்து விடாதே! உன் போராட்டம் நியாயமானது. மத்திய மாநில அரசுகள் கதிகலங்கட்டும். உன்னை இழந்து விடாது போராடு. இவ்வாண்டு இறுதிக்குள் நிரந்தர தீர்வைத்தரட்டும். காவிரி நீரை உன் சந்ததி பருகட்டும்!.

அன்புடன் உன் ஈழத்துச் சகோதரன்.

Share This:
Loading...

Related Posts

Loading...