உடுவில் மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் மீது நடந்த அராஜகம் – மாணவிகளுக்கு அடிக்கும் உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார்..?

Share this post:

udu

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மிகப்பெரும் காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.

இந்த சம்பவத்தால் யாழ்ப்பாண தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.

தென்னிந்திய திருச்சபை என்ற வணக்கத்துக்குரிய சமய அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கக்கூடிய உடுவில் மகளிர் கல்லூரியில் இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் நடந்தமை மிகவும் வேதனைக்குரியவை.

இத்தகைய சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும்.

கல்லூரி அதிபரை தொடர்ந்து சேவையில் இருத்துமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தால், அந்தக் கோரிக்கையை சாதகமாகக் பரிசீலிப்பது அல்லது மாணவர்களுக்கு உரிய விளக்கத்தைக் கொடுப்பதே நாகரிகமான செயலாகும்.

இதைவிடுத்து மாணவிகளை துரத்தித்துரத்தித் தாக்குவதென்பது ஒரு வெறியாட்டச் செயலாகும்.

அதிலும் மத போதனை செய்யக்கூடிய வணக்கத்துக்குரிய பதவியில் இருப்பவர்கள் இத்தகைய காட்டு மிராண்டித்தனமான செயலில் ஈடுபடுவதென்பது எந்த வகையிலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இத்தகைய செயல்கள் மதத்தின் பெயரால் பாரா முகப்படுத்தப்படுவதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

இத்தகைய வன்மத்தனங்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் ஏனைய பாட சாலைகளிலும் பரவக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

தவிர, உடுவில் மகளிர் கல்லூரி விடயத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு நிச்சயம் தலையிட்டு பாடசாலையை ஒருசில தினங்களேனும் மூடியிருக்க வேண்டும்.

அந்தக் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு கண்ட பின்னர் அந்தக் கல்லூரியின் இயங்கு நிலை வழமைக்கு திரும்பியிருக்கும்.

ஆனால், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகம் தனக்கும் அந்தக் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொண்டது.

இதன் காரணமாகவும் பாடசாலை வளாகத்திற்குள் இருந்த மாணவிகள் மீது தாக்குதல் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது எனலாம்.

இதேவேளை உடுவில் மகளிர் கல்லூரியில் நடந்த காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் தனித்து அதிபர் தொடர்பில் மட்டுமே நடந்ததாகக் கருதி விட முடியாது.
இதன் பின்னணியில் மாணவிகளைத் தாக்குதல், அதனூடாக யாழ்ப்பாணத்தில் மாணவர்களை கண்டனப்பேரணியில் ஈடுபட வைத்தல் என்ற ஒரு பெரும் சதித்திட்டம் நடைபெறுவதற்கான முயற்சியாகவும் இருந்துள்ளது எனக் கருதுவதற்கு இடம் உண்டு.

எனவே இவை எல்லாவற்றுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும் எனில், மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும். நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனினும் மாணவிகளை தாக்கியவர்களை கைது செய்வதில் இதுவரை பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாறாக மாணவிகளை புகைப்படம் எடுத்து மிக மோசமான மனித உரிமை மீறல் செயல்களில் பொலிஸார் ஈடுபட்ட தாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இத்தகைய குற்றசாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் உண்மை நிலையை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் பொலிஸார் மீதான நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் ஆசிரியரால் மாணவர் தாக்கப்படும் போது உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யும் பொலிஸார், உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளை துரத்தித் துரத்தி தாக்கியவர்களை கைது செய்யாதது ஏன்? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...