திருமணத்துக்காக கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை கைது…

Share this post:

kolai

திருமணத்துக்காக கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாரிமுனையில் பகுதியில் நேற்றிரவு ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை நிரப்ப வந்த வேன் பணத்துடன் கடத்தப்பட்டது. அதிரடியாக பூக்கடை துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் களமிறங்கி வேன் டிரைவர் ராஜேஷ், அவரது நண்பர் லிங்கம் ஆகியோரை கைது செய்தது.

அயனாவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பாரிமுனையில் உள்ள ஏ.டி.எம் மையங்களுக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. 50 லட்சத்துக்கும் அதிகமான பணம் வேனில் இருந்தது. குறுகிய சந்தில் இருந்த ஏ.டி.எம் மையத்துக்கு வேன் செல்ல முடியாததால் சாலையில் வேனை நிறுத்தினர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் பணம் ஏ.டி.எம் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சமயத்தில் பெரம்பூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் மட்டும் வேனில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. வேனை விட்டு இறங்கி ராஜேஷ் பேசினார். இந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் வேனை எடுத்த மர்ம நபர், அங்கிருந்து பறந்தார். ராஜேசும் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து பாதுகாவலர்கள் அங்கு விரைந்தனர்.

இதுதொடர்பாக வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வேன் நம்பர் மற்றும் அடையாளம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த சமயத்தில் ராயபுரம் பகுதியில் வேன் அனாதையாக நின்றது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து பணம் கொண்டு வந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது டிரைவர் ராஜேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தனியாக போலீஸார் விசாரித்தனர்.

அவரது போனுக்கு வந்த அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது தான் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதே ராஜேஷ் என்பது போலீசுக்கு தெரியவந்தது. உடனடியாக ராஜேஷை கைது செய்தனர். தொடர்ந்து காரை கடத்திய ராஜேஷின் கூட்டாளி வியாசர்பாடியை சேர்ந்த லிங்கத்தையும் போலீஸார் கைது செய்து இருவரிடமிருந்து 26 லட்சம் ரூபாயை மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “கைதான ராஜேஷ், பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஏற்கனவே வேலைப்பார்த்தவர். இப்போது சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். பணம் சப்ளை செய்யும் நிறுவனத்தில் டிரைவர் இல்லாத சமயத்தில் அங்கு பணிக்கு செல்வார் ராஜேஷ். அப்படி தான் நேற்றும் வேலைக்கு சென்றுள்ளார்.

ராஜேஷின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமம். 8ம் வகுப்பு வரை படித்த அவருக்கு வேன் வாங்கியதில் 4 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மேலும் வரும் 3ம் தேதி சிறுனியத்தில் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது. திருமணத்துக்கு தேவையான பணமும் கையில் இல்லை. இந்த சமயத்தில் லட்சக்கணக்கான பணத்தை பார்த்தவுடன், லிங்கத்தின் மூலம் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். திருமணத்துக்கு 4 நாட்கள் உள்ள நிலையில் புதுமாப்பிள்ளை ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...