மட்டக்களப்பில் மகளிருக்கு மட்டுமான விசேட பஸ் சேவை ஆரம்பம்…!

Share this post:

makslir

மட்டக்களப்பில் வாரஇறுதி விசேட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளின் நலன் கருதி மகளிருக்கு மட்டுமான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு வாரஇறுதி விசேட வகுப்பிற்காக செல்லும் பெண் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகளிர் பஸ் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையிடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு காரியாலயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன் பிரதிபலனாக நேற்றைய தினம் பிற்பகல் 02.30 மணியளவில் ஆரையம்பதி பேரூந்து நிலையத்தில் வைத்து இந்த பஸ் சேவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட காரியாலய போக்குவரத்து அதிகாரி அன்வர், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மகளிர் பேரூந்து சேவையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிப்பட்ட ஓர் சேவையாகும்.

இச்சேவையானது ஆரம்பகட்டமாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பி.ப 2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கும் மீண்டும் 6.00 மணிக்கு மட்டக்களப்பு நகரிலிருந்து ஆரையம்பதிக்கும் இவ்விசேட மகளிர் பேரூந்து சேவை நடைபெறும்.

இச்சேவையினூடாக வகுப்புகளுக்கு செல்லும் விசேடமாக பெண் மாணவிகள் அச்சமின்றி பாதுகாப்பாக தமது கல்வி சேவையினை முன்னெடுத்து செல்வார்கள்.

அத்துடன் அலுவலகங்களில் கடமைபுரிகின்ற பெண்களுக்கும், அதேபோன்று தமது அன்றாட தேவைகளுக்காக பிரயாணம் செய்யும் பெண்கள் அனைவரும் இச்சேவையின் மூலம் பயன்பெறமுடியும்.

மேலும் இச்சேவையானது பயணிகளது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்குமிடத்து இதனை நாளாந்த சேவையாக காலையிலும், மாலையிலும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் இந்நிகழ்வின்பாேது தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...