இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கும் நல்லாட்சி அரசு – நாமும் வாழ்த்தலாமா..?

Share this post:

mait

சர்வாதிகாரத்தின் பக்கம் பயணித்துக் கொண்டிருந்த நாட்டை 2015 ஜனவரி 8ம் திகதி மீண்டும் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் மக்களாணையின் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் மீட்கப்பட்டது.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் இந்தப் பாரிய முயற்சியில் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ள ஜனநாயக சக்திகளும், ஒன்றிணைந்தன.

அந்த இருதரப்புக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பல அரசியல் சக்திகளும் பங்களிப்புச் செய்தன. அந்த வரலாற்றுச் சாதனையின் மூலம் நாடு சர்வாதிகாரம் என்ற பயங்கர பிசாசிடமிருந்து காப்பாற்றப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை 100 நாள் ஆட்சியாக பிரகடனப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

100 நாள் வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டதையடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதும் ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மையை பெற முடியாத நிலை ஏற்பட்ட போதிலும் சுதந்திரக் கட்சியின் மூலம் தெரிவான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களை இணைத்து தேசிய அரசு அமைக்கப்பட்டது.

பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து நல்லாட்சியை உறுதிப்படுத்தும் அரசை அமைத்து ஐந்தாண்டு கால வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள்.

அபிவிருத்தியை நோக்கிய இந்தப் பயணத்தை பலத்த சவாலுக்கு மத்தியிலேயே மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவு கண்டிருந்த நிலையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தேசிய அரசு தள்ளப்பட்டிருந்தது.

இதனிடையே மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவருக்கு ஆதரவளித்த சில சக்திகளும் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதிலேயே குறியாகச் செயற்பட்டு வருகின்றனர்.

அரசின் பயணத்துக்கு காலக்கெடு விதித்து வேரறுக்கும் திட்டத்தை வெளிப்படையாகவே மஹிந்த அணி முன்னெடுத்தது. இன்றும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

அண்மையில் மஹிந்த அணி முன்னெடுத்த பாத யாத்திரை மிக முக்கியமானது. இந்தப் பாத யாத்திரை அவர்களால் எதிர்பார்த்தை பெற்றுக் கொடுக்கத் தவறியதை நன்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தளவு மக்களை ஒன்று திரட்ட முடியாத நிலையே ஏற்பட்டது.

இந்த நிலையில் நல்லாட்சியை இலக்காகக் கொண்ட தேசிய அரசு அதன் ஓராண்டுப் பூர்த்தியை நிறைவுசெய்து இன்று இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

ஐந்தாண்டுகள் என்ற நீண்ட பயணத்தின் முதலாவது மைல் கல்லையே தேசிய அரசாங்கம் கடந்துள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை வளமாக்குவதன் இலக்கில் திட்டமிட்டு பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையையே அரசு எதிர்கொண்டிருக்கின்றது.

நாடு குட்டிச்சுவராகும் அதி பயங்கரமானதொரு கட்டத்தில் ஆட்சி அதிகாரம், பதவிகள் என்பதற்கப்பால் தேசத்தை, தமது தாய் மண்ணை மீட்டுப் பாதுகாக்க வேண்டிய கட்டாய கடப்பாட்டுக்குள் ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் ஒன்றுபட்டு கட்சி பேதங்களை மறந்து முதலில் நாடு அதனையடுத்தே அரசியல் செயற்பாடு என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திட்டமிட்டு எதிர்காலத்தை இலக்குவைத்து வியூகம் அமைத்துச் செயற்பட்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியிலும் கூட சதி முயற்சிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. மஹிந்த தரப்பினரின் அரசியல் சதித்திட்டங்களும், இனவாதத்தைத் தோற்றுவித்து சமூகங்களுக்கிடையே பிளவை உண்டாக்கி ஒன்றுபட்ட நாட்டை சீர்குலைக்கும் சக்திகள் மற்றொரு பக்கமாகவும் நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சவால்களை முறியடித்து நாட்டை பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தியிலும் முன்னேற்றுவது என்ற இலக்கில் மைத்திரி, ரணில் அரசு ஐந்தாணடுத் திட்டத்தை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது அவ்வளவு இலகுவான பயணம் அல்ல. கரடுமுரடானது என்பதை மறுக்க முடியாது. பயணப் பாதை கஷ்டமாக இருப்பினும் இப்பாதையில் அரசு பயணித்தேயாக வேண்டும்.

இடை நடுவில் நின்று விட முடியாது. ஓய்வெடுக்கவும் முடியாது. அப்படியான நிலை ஏற்படுமானால் எதிரணியினருக்கே அது வாய்ப்பாகப் போய்விடும்.

நல்லாட்சியை இலக்காகக் கொண்ட இந்த தேசிய அரசாங்கத்தின் கஷ்டமான இலக்கு நோக்கிய பயணத்துக்கு ஜனநாயகத்தை நேசிக்கின்ற நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட மக்கள் ஒவ்வொருவரும் ஆதரவும், ஒத்துழைப்பும் நல்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.

சதிகாரர்களின் சூழ்ச்சி வலைக்குள் மக்கள் சிக்கிவிடக்கூடாது. கடந்த காலத்தை எம்மால் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்று எதிர்கொண்ட நெருக்கடிகள், மக்கள் மீதான அழுத்தங்களை எண்ணிப் பார்க்கின்ற போது இன்று நாட்டு மக்கள் ஓரளவேணும் நிம்மதிப் பெருமூச்சு விட முடிகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் அடுத்த நான்கு வருடங்களுக்குப் பயணிக்க வேண்டும். ஓராண்டுக்குள் திட்டங்களுக்கு அடித்தளமிட மட்டுமே முடியும்.

அடுத்த கட்டத்திலேயே பணிகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் நாடு பொருளாதார ரீதியில் ஒரு பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.

அதன் போது மக்கள் சிறிதளவு கஷ்டங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். பொறுமை காக்க வேண்டும்.

இன்று முதல் ஆரம்பிக்கும் இரண்டாவது ஆண்டு நிச்சயமாக மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஆண்டாக மிளிரும் என நம்பலாம். எதிர்பார்க்கலாம்.

எதிர்ப்புகளையும், சவால்களையும் முறியடிக்கும் விதத்தில் நாட்டு மக்களனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரதும் கரங்களை பலப்படுத்தி இந்தப் பயணத்தில் இணைந்து செயற்பட உறுதிபூண வேண்டும்.

எதிர்காலம் நம்பிக்கை தருவதாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சிப் பயணம் தொடர வாழ்த்துவோம்.

Share This:
Loading...

Related Posts

Loading...