அனுமன் பாலம் தேசத் துரோகமா? – இலங்கை அரசியல் வாதிகளின் கூற்று சரிதானா…?

Share this post:

paalam

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற பாரதியாரின் வரிகளை இந்தியா உண்மையாக்கி விடுமோ என்ற அச்சம் சிங்களத் தேசியவாதிகளிடம் மாத்திரமன்றி, பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளிடமும் இருக்கிறது என்பதை கடந்த வாரம் உணர முடிந்தது.

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக மீண்டும் எழுந்த சர்ச்சையும், அதுதொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுமே இந்த அச்சத்தை வெளிக் கொண்டு வந்தது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த கருத்தரங்கு ஒன்றில், இந்தியக் குழுவினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கபீர் காசிம், இந்தியா–- இலங்கை இடையே பாலம் அமைப்பது சாத்தியமாகலாம் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகிறது என்று இலங்கை அரசாங்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதலாவது தகவல் இது தான்.

இதற்கு முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே இந்தப் பாலம் தொடர்பாக இந்தியத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்தியாவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தான் இந்த தகவலை முதலில் வெளியிட்டவர்.

இரண்டு நாடுகளையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் நிதியுதவியையும் கோரியிருந்தது இந்தியா. 23 ஆயிரம் கோடி ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்துக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணங்கியிருந்தது.

இதுபற்றிய சாத்திய ஆய்வை மேற்கொள்ளவிருப்பதாகவும் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். இதுபற்றி இந்திய பாராளுமன்றத்திலும் தகவல் வெளியிடப்பட்டது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி வந்திருந்த போது, இதுபற்றிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அத்தகைய பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்தத் திட்டம் குறித்து தம்மிடம் இந்தியா ஆலோசிக்கவில்லை என்றும் கூறிவந்தது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றவர்கள் இதனை பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் தெரிவித்து வந்தனர்.

ஆனாலும், பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பான முயற்சிகளை இந்தியா கைவிடவில்லை. அவ்வப்போது அந்தத் திட்டம் பற்றிய செய்திகள் வெளியாகியே வந்தன.இந்த நிலையில் தான், முதல்முறையாக அமைச்சர் கபீர் காசிம், ஜகார்த்தாவில், இந்தப் பாலம் அமைக்கும் திட்டத்தின் சாத்தியம் குறித்தும், அதுபற்றிய பேச்சுக்கள் இரண்டு நாடுகளுக்கிடையில் நடத்தப்படுவது குறித்தும் தகவல் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

இந்தப் பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னரே, இப்படியான திட்டம் ஒன்று இருக்கிறது என்பதை இரண்டு நாடுகளும் இணைந்து அதிகாரபூர்வமாக அறிவிக்க முன்னரே, இதற்கு ‘அனுமன் பாலம்’ என்று உதய கம்மன்பில போன்ற சிங்களத் தேசியவாதிகள் பெயர்சூட்டி விட்டனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அனுமன் பாலம் அமைக்கப்பட்டு விட்டால், இந்தியாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறிவிடும் என்றும், தமிழ்நாட்டுடன் வடக்கு, கிழக்கு இணைந்து விடும் என்றும், பலவிதமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. படையெடுப்பு, ஆக்கிரமிப்பு என்பன போன்ற சொற்கள் தாராளமாகவே பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு நாடுகளுக்கிடையிலான பாலம் என்பதை சிங்கள அரசியல்வாதிகள் ஒரு ஆக்கிரமிப்பின் சின்னமாகவே சித்திரிக்க முனைகின்றனர்.தற்கால நவீன உலகில் தரைவழிப் போக்குவரத்தை இலகுபடுத்தும் பாலங்கள் ஏராளமாக அமைக்கப்படுகின்றன.

போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கும் நோக்கிலும் வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கிலும் அமைக்கப்படும் இத்தகைய பாலங்களின் பின்னால் அரசியல், பாதுகாப்புக் காரணிகளும் இருக்கத் தான் செய்கின்றன.

ஆனாலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைக்கப்படக் கூடிய பாலத்தை, தனியே பாதுகாப்பு நோக்கில், சிங்கள இனத்தை அடிமைப்படுத்தும் குறுகிய நோக்கிலேயே சிங்கள அரசியல்வாதிகள் பார்க்கின்றனர்.

இதற்கு உதய கம்மன்பில போன்றவர்கள் மாத்திரமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்களும் விதிவிலக்கானவர்களில்லை.அமைச்சர் கபீர் காசிம் ஜகார்த்தாவில் இந்தப் பாலம் தொடர்பாக கருத்து வெளியிட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன போன்றவர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, பாலம் அமைக்கும் பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.அவருக்கு மேலாகச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டிருந்த கருத்தே இங்கு முக்கியமானது.

தலவத்துகொடவில் உள்ள விகாரை ஒன்றில் நடந்த நிகழ்வில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.

அவ்வாறு கூறப்படும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று குறிப்பிட்டிருந்தார்.அத்துடன், இருநாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது போன்ற தேசத்துரோகமான செயல் எதையும் தமது அரசாங்கம் செய்யாது என்றும் கூறியிருந்தார்.

அதாவது இந்தியா- இலங்கை இடையில் பாலத்தை அமைக்கும் செயலை தேசத்துரோக நடவடிக்கை என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழித்திருக்கிறார். இது பாரதுரமான ஒரு விடயம்.பாலம் அமைக்கும் விவகாரம் இரண்டு நாடுகளின் உறவுகளின் அடிப்படையில், பொருளாதார, மற்றும் போக்குவரத்து காரணிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒன்றாகும்.

அதனை நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்பது போன்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதானது, சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இந்த அனுமன் பாலம் குறித்த அச்சம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வைக்கிறது.நாடுகளை இணைத்து நெடுஞ்சாலைகள் பாலங்களை அமைத்து, தரைவழிப் போக்குவரத்தை இலகுபடுத்தும் திட்டங்கள் உலகெங்கும் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைக்கப்படும் போதும் அத்தகைய பொருளாதார சாதகங்கள் இருக்கவே செய்யும். அதேவேளை சில பாதகமான விடயங்களையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.சாதகமான விடயங்கள் எவை, பாதகமான விடயங்கள் எவை என்று ஆய்வுகளை நடத்தி முடிவுகளை எடுப்பதற்கு முன்னரே சிங்கள அரசியல் தலைமைகள் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்து விடுகின்றன.

இந்தியாவுடன் எத்தகைய உடன்பாட்டைச் செய்து கொள்ள முயன்றாலும், இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த முயன்றாலும், சிங்கள அரசியல்வாதிகளுக்கு அது அச்சத்தையே ஏற்படுத்துகிறது.அனுமன் பாலம் விடயத்தில் மாத்திரமன்றி, இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த, முனையும் எந்த விடயத்திலும், இதுபோன்ற அச்சமூட்டும் கருத்துக்கள் வெளியிடப்பட்டே வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையே கப்பல் சேவையை விரைந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதென இணங்கப்பட்டது.ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதில் ஆர்வம் காட்டவில்லை.

அவ்வாறு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டால், அது தமிழ்நாட்டுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு இருப்பதே இந்த இழுபறிக்குக் காரணம்.

அனுமன் பாலம் சாத்தியமா – இல்லையா என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே, அதனை வைத்து பிரமாண்டமான கற்பனைகளை தட்டி விடுகிறார்கள் அவர்கள்.

தீவு தேசமாக – தனித்திருந்து பழகிப்போய் விட்ட கிணற்றுத் தவளைகளாகத் தான், சிங்கள அரசியல் தலைமைகள் இன்னமும் இருக்கின்றன.

பாலம் அமைப்பதை தேசத்துரோகம் என்று குறிப்பிட்டதன் மூலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார்.

அதாவது அனுமன் பாலத்தை அமைக்கும் முயற்சிகள், பேச்சுக்களில் ஈடுபடுபவர்களை அவர் தேசத்துரோகிகளாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

இப்படியானதொரு நிலையில், இந்தியாவுடன் எந்த அரசாங்கமும் பாலம் அமைப்பது குறித்துப் பேச முனைந்தால், அது தேசத்துரோகச் செயலாக சிங்கள மக்களால் முத்திரை குத்தப்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

Share This:
Loading...

Related Posts

Loading...