என் மக்கள் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நானும் நேரடியாக அனுபவித்தவன்- சிவமோகன்

Share this post:

ra,i.

அண்மைக்காலமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட விஷ ஊசி செலுத்தப்பட்டு முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறப்பதாக செய்திகள் வெளியான நிலையில் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் 108 பேர் இந்த விஷ ஊசிக்கு பலியாகியதாக தரவுகளை ஒரு சந்திப்பின் போது முன்வைத்தனர் .

அந்த சந்தர்ப்பத்தில் நான் அந்த சந்திப்பில் இருந்த முடிவெடுக்கும் அதிகாரமுடைய பலரின் மத்தியில் 02 விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தேன் .

நான் தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் ஓடி ஒழிக்காமல் மக்கள் உடல்க்காயங்களுக்கு என் உயிரை வெறுத்து என் உல்லாச வாழ்க்கையை வெறுத்து உண்மையான உணர்வோடு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தவன் என்பதை வன்னி மக்கள் அதிகமாகவே அறிவார் .

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மாற்றியக்கங்களுடன் இருந்து மக்களை காட்டிக்கொடுத்து அடிவருடியாக வாழவில்லை . யுத்தம் ,மனித இரத்தம் ,மரண சத்தம் என்பனவற்றை நான் நேரடியாகவே அனுபவித்தவன் .

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்வியல் போராட்டம் தொடங்கிய போது என் இனம் பட்ட வேதனைகளை இறுதிவரை நன்கு அறிந்தவன் என்ற ரீதியில் அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு அவர் தேவைகளை வென்று கொடுக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்.

கடவுள் எனக்கு திருப்தியாக வாழ எல்லா வசதிகளையும் தந்திருக்கின்றான் .அதனால் நான் மக்களின் தியாகங்களையும் அப்பணிப்புக்களையும் அரசியலாக்கவோ இறந்தவர்களின் சிதை மேல் ஏறி நின்று அரசியல் லாபம் தேடவோ தேவை ஏற்படவில்லை .

பொருளாதார வளர்ச்ச்சியடையாத எந்த ஒரு இனமும் அல்லது பொருளாதார ரீதியில் அடிமைகளாக்கப்பட்ட எந்த ஒரு இனமும் அடுத்த கட்டத்தை அடையமுடியாது என்பதை வரலாற்று இனரீதியான போர்கள் எமக்கு கற்றுத்தந்திருக்கின்றன .

ஒரு கொள்கை இல்லாத உயிர்வாழ்தலை மட்டுமே கொள்கையாகக்கொண்டு இழிந்த வாழ்வு வாழும் சில தமிழ் அரசியல்வாதிகள் தமிழரின் உயிர்த்தியாகங்களை பொய்யாக்கி விடுதலை உணர்வு பெற்ற தமிழினத்தின் இறப்புக்களையும் இழப்புக்களையும் தமிழனுக்கு இறுதியில் இளைக்கப்பட்ட மனிதாபிமானம் அற்ற போர் நடவடிக்கைகளையும் பொய்யாக்க முயல்வது தமிழினத்துரோகம் என்பதனால் நான் சில கருத்துக்களை அன்றைய சந்திப்பில் முன் வைத்தேன் .

நான்கூறிய விடயங்கள் …………..

விடயம் 01

108 போராளிகள் விஷ ஊசி ஏற்றப்பட்டு கொள்ளப்பட்ட தரவு நிறுவப்படாத நிலையில் அது அளவு அடிப்படையில் பொய்யானால் அல்லது ஆய்வுக்குட்படுத்தப்படும் அளவுக்குள் அடங்காது விட்டால் தமிழனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அனைத்து போர் மீறல்களும் வன்முறைகளும் படுகொலைகளும் பொய்யாக்கப்பட்டு விடும் .

ஆகவே விஷ ஊசி ஏற்றப்பட முன்னாள் புலி உறுப்பினர்களின் உண்மையான எண்ணிக்கையை விபரங்களுடன் சமர்ப்பித்து நாம் கடும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் .

அதற்காக நாம் கடும் முயற்சி செய்ய வேண்டும்.பொய்யான தரவுகள் அல்லது உறுதிப்படுத்தப்படாத தரவுகளால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணாமல் போக வாய்ப்புக்கள் உண்டு .

இதற்காகத்தான் அரசு சில தமிழ் அரசியல் வாதிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகிறது என நான் சந்தேகம் கொள்கிறேன் . என்றேன் .
விடயம் 02

திடீரென மக்கள் மனதில் இடம்பிடிக்கவும் சும்மா தேசியம் என வார்த்தை அளவில் கதைக்கவும் விஷ ஊசியால் பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கையை குத்து மதிப்பில் கூட்டி கூறுவதால் மற்றைய போராளிகள் அவர்களின் வயதான தாய் தந்தையர் மனைவி பிள்ளைகள் உடன் பிறப்புக்கள் என்பவர்களின் உளவியல் நிலை பெரிதும் பாதிக்கப்படும்.

நாளையேனும் தன் மகன் வருவான் அவன் 3 நேர உணவும் தருவான் என எதிர் பார்த்திருக்கும் அந்த வயதான தாய் தந்தையர் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதால் உடல் ரீதியிலும் பாதிக்கப்படுவர் என்பதை நான் வைத்தியர் என்ற ரீதியில் உரைத்தேன் .விழுதுகள் பாதுகாக்கப்படும் போதும் வேர்களை விட்டு விட முடியாதல்லவா ?
தமிழ் தேசிய இன விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு அன்று தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கு தமிழர்களாக இருந்தும் எதிராக செயற்பட்டார்கள் என விடுதலைப்புலிகளால் துரோகிகள் என இனங்காணப்பட்ட சில ஆயுதக்குழுக்கள் அன்று தாம் உயிர் வாழ அன்றைய அரசுடன் சேர்ந்து ஆயுத குழுக்களாக ஒரு இராணுவ அமைப்பாக தமிழருக்கெதிராக செயற்பட்டார்கள்.

பின்னர் மகிந்தவின் காலத்தில் கடும் ஆட்டம் போட்டார்கள் .ஆனால் இன்னமும் அவர்கள் சிங்கள அரசுடன் நல்லுறவை விடுத்தபாடில்லை .இனியேனும் தமிழ் தேசியம் பற்றி சிந்திக்க தயாராயில்லை .இவர்களின் கடந்த கால வாழ்வியல் தான் பல தமிழர் தியாகங்கள் ஈழ விடுதலை உணர்வுகள் சுதந்திர வாழ்வு போன்றன அவர்களுக்கு புரியாமலேயே போய்விட காரணமாயிற்று என நான் நினைக்கிறேன் .

மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தி வரும் சில ஊடகங்கள் .சில செய்திகளின் உண்மை தன்மையை சம்மந்தப்படவரிடம் கேட்காமலேயே பிரசுரிப்பதும் சில ஊடகவியலாளர்கள் தங்கள் வித்துவத்தை காட்டுவதாக நினைத்து தமிழ் தேசியத்தை கொச்சப்படுத்துவதாக செயற்படுகின்றமையும் உண்மையில் கவலை தருகிறது .

மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் சரியான தகவல்களை கொண்டுபோய் சேர்க்கும் உண்மையான உறுதியான பாலமாக இருக்க வேண்டியவர்கள் ஊடகவியலாளர்கள் .அவர்கள் பணி புனிதமானது அதை எந்த சந்தர்ப்பத்திலும் மாசுபடுத்த வேண்டாம் எனவும் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் .

Share This:
Loading...

Related Posts

Loading...