நல்லூர் முருகா! யார் அவர்கள் ஏன் உன்னிடம் வருகின்றார்கள்?

Share this post:

nalloor

நல்லூர்க் கந்தனுக்கு அன்பு வணக்கம்.நேற்றும் காகிதம் எழுதினேன். இன்றும் இம் மடலை எழுதுவதற்குக் குறைவிளங்க வேண்டாம்.

உன்னைத் தவிர வேறு யாருக்குத்தான் நான் காகிதம் எழுத முடியும். எல்லாக் குறையும் உன்னிடமே உரைப்பவன் என்பதால், இக்கடிதம் எழுதுவதில் குறையில்லை.

நேற்று உன் கொடியேற்றம் கண்டேன். மிகச்சிறப்பாய் அமைந்திருந்தது. அடியார் கூட்டம் முன்னரிலும் அதிகம்.

சரியாக பகல் 10 மணிக்கு கொடியேறியது. அந்த அற்புதத்தைக் கண்குளிரக் காண்பதற்கு அளித்த கருணைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

மாலை விழாவிலும் வணங்கும் பேறு பெற்றேன். ஈசானத்தில் திருவாசகம் ஓதும் ஒரு புதுமை கண்டேன். கல் மனதையும் உருக வைத்த அந்தத் திருவாசகத்தால் என் நெஞ்சு நெக்குருகிக் கொண்டது.

இப்படியே வெளிவீதி முழுவதிலும் புதுமைகள் செய்தால் அடியார் கூட்டம் பிறவார்த்தை பேசுவதற்கு ஏது இடம் என்று நினைத்தேன்.

காலக்கிரமத்தில் மாப்பாணருக்கு நீ கட்டளை இடுவாய் என்று என் உள்ளம் உணர்கிறது.வெளிவீதியில் பறக்கின்ற சேவல் கொடிகள் அற்புதம்.

அட! எதையோ எழுதுவதற்கு வந்து ஏதோ எழுதுகின்றேன். நல்லூர்க் குமரா! இக்கடிதம் எழுதுவதன் அவசரம் ஒரு செய்தியைச் சொல்வதற்குத்தான்.

உன் கொடியேற்றத் திருவிழாவில் ஏகப்பட்ட வெளிநாட்டவர்களைக் கண்டேன். அதிலும் வெள்ளைக்காரர்கள் ஏராளம். தங்கள் குழந்தைகளையும் அவர்கள் உன்னிடம் கூட்டி வந்திருந்தனர்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் உறவுகளை நான் குறிப்பிடவில்லை.இவர்கள் வெளிநாட்டவர்கள். எனக்கு ஏற்பட்ட ஐயம் என்னவெனில் இவர்கள் ஏன்தான் உன்னிடம் வருகின்றனர் என்பதுதான்.

அவர்களின் சமயம் வேறு, நாடு வேறு, மொழி வேறு. யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதற்கு வந்தவர்கள் என்றால் உன் கோயிலுக்குள் வரவேண்டிய தேவையென்ன?

அதிலும் வெள்ளைக்கார ஆண்கள் மேலாடை களைந்து உன்னிடம் வருகின்றனர். தீபம் காட்டும் போது கையயடுத்துக் கும்பிடுகின்றனர்.

அவர்கள் உன் திருவிழாவை ஒரு காட்சியாகப் பார்க்கவில்லை. தெய்வீகத்தோடு தரிசிப்பது அவர்கள் முகங்களில் தெரிகிறது.

எங்கோ இருப்பவர்கள் உன்னைத் தேடி, நாடி உன்னுடன் மிக நீண்ட நேரத்தைச் செலவிட்டு வணங்குவது ஏன்? இதெல்லாம் எப்படி நடக்கிறது? முருகா சொல்!

சிலவேளை முன்னம் உன்னுடைய திருக்கோவிலை சேதம் செய்த குடியேற்றவாதிகளின் மறு பிறப்போ இவர்கள். இங்கு வந்து உன்னிடம் பிறவாமைப் பேறு வேண்டுகின்றனரோ?

அல்லது உனக்குக் கோவில் எடுத்து வழிபட மாப்பாணருக்கு அனுமதி வழங்கிய வெள்ளைகார பிரபுகளின் மறுபிறப்புச் சந்ததியோ?

ஏதோ ஒரு தொடர்பு உண்டு. இல்லாமல் அவர்கள் உன் திருமுகத்தையே பார்த்தபடி; தம் புகைப்படத்தில் பதிவு செய்தபடி நிற்கத் தேவையில்லை.

எதுவாகவிருந்தாலும் உனக்கு வெளிநாட்டுத் தொடர்பு அதிகமாயிற்று. அந்த இறுமாப்பில் எமை மறந்து விடாதே!

நீ ஏசினாலும் அடித்தாலும் உதைத்தாலும் வதைத்தாலும் நல்லூர் முருகா! என்று உன் நாமம் சொல்வதைத் தவிர வேறு வழி தெரியாதவர்கள் நாம்.

ஆதலால் எங்களை மறந்து விடாதே. இதைச் சொல்லவே இக்கடிதம் அவசரமாய் எழுதினோம். ஏற்றுக்கொள்க!

Share This:
Loading...

Related Posts

Loading...