மனைவியை காருக்குள் வைத்து எரித்து கொன்ற கணவன்..!

Share this post:

thee

சென்னையில் மனைவியை காருக்குள் எரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர் டாக்டர் தாமஸ் ரோட்டில் வசித்து வருபவர் நாகராஜன் (33). கால் டாக்சி டிரைவரான இவருக்கும் தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த பிரேமா (29)வுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாகராஜன்-பிரேமா தமபதியினருக்கு நிஷாந்த்ராஜ் (4), யஸ்வந்த்ராஜ் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக நாகராஜன்-பிரேமா தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சண்டை ஏற்படும் பொழுது பிரேமா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நாகராஜனுக்கும், பிரேமாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் பிரேமா கோபித்துக் கொண்டு தனது மகன்களுடன் தேனாம்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனிடையே நேற்று காலை நாகராஜனுக்கு போன் செய்த பிரேமா என்னை அழைத்துச் செல்லுங்கள், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நாகராஜன் தனது காரில் தேனாம்பேட்டைக்கு சென்று மனைவி பிரேமாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார். காரில் செல்லும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமா, நான் உங்களுடன் வரவில்லை. என்னை எனது அம்மா வீட்டிலேயே விட்டு விடுங்கள் என்று கூறினார். வாக்குவாதம் முற்றியதால் நந்தனம் அருகே நாகராஜன் காரை நிறுத்தியுள்ளார். மேலும் காரில் இருந்த பெட்ரோலை எடுத்து பிரேமா காருக்குள் வைத்தே தலையில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் கோபம் அடைந்த நாகராஜன் காருக்குள் வைத்தே பிரேமாவை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த பிரேமா அலறி துடித்தார். பிரேமாவின் உடலில் பற்றிய தீ அருகில் இருந்த 2 குழந்தைகள் மீதும் பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமா காரில் இருந்து குழந்தைகள் இருவரையும் தூக்கி வெளியில் வீசி காப்பாற்றினார். இதனால் 2 குழந்தைகளும் லேசான தீக்காயத்துடன் உயிர் தப்பினர்.

மேலும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய பிரேமா கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மாலை 6 மணிக்கு பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், “தனது கணவர் நாகராஜன் செத்துபோ என கூறி எனது உடலில் தீ வைத்ததாக” கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் நாகராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...