யாழ் நகரை போன்று மட்டக்களப்பையும் அபிவிருத்தி செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை

Share this post:

jaffna

மார் 65 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு நகரை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமருடன் பேசியுள்ளேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!

பல ஆண்டுகள் செய்யப்படாத வேலைகளை நாங்கள் செய்து சாதித்துள்ளோம். மாகாணத்திலுள்ள ஒட்டு மொத்த அரசியல் அதிகாரங்களுக்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். பாரிய வேலைத் திட்டங்களை நிறைவு செய்துள்ளோம். இனி என்ன வேலைகள் செய்ய வேண்டுமென தேடிப் பார்க்க வேண்டிய நிலைக்கு வேலைத் திட்டங்களை பூர்த்தி செய்துள்ளோம்.

நாங்கள் ஆட்சியமைத்ததன் பிற்பாடு முதல்கட்டமாக முதலமைச்சர்கள் எல்லோரையும் ஒன்றிணைந்து மாகாணங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்ற அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு, அதிகாரப்பகிர்வு வெறுமனே எழுத்துக்களால் மாத்திரம் தரப்படுகின்ற விடயமல்லாமல், நிதி ஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டிய தேவையை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துக்கூறி கல்வித்துறையிலே பெற்றுக் கொண்டோம்.

கிழக்கு மாகாணத்தில் கல்விக்காக ஏறத்தாழ 1600 மில்லியன் ரூபாய் நிதியும், அபிவிருத்திக்காக 7200 மில்லியன் ரூபாய் நிதியும் பெற்றுக் கொண்டுள்ளோம். இருபது வருடங்களுக்குள் ஒட்டுமொத்த மாகாண சபைக்கும் கொடுக்கப்பட்ட பணத்தை விட கிழக்கு மாகாண சபைக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

13வது அரசியல் சட்ட திருத்தத்தில் சுகாதாரம் அதிகாரப் பரவலாக்கப்பட்ட விடயம். அதனால் தான் எங்களுக்குள் வைத்தியசாலை வந்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசாங்கம் வைத்துக் கொள்வது நியாயமற்ற விடயமென்பதை மத்திய அரசாங்கத்திற்கு சொல்லி வருகின்ற போராட்டத்தில் இந்த வருடம் வெற்றி காண்போம்.

இப்போராட்டத்தின் காரணமாக ஏறத்தாழ 1100 மில்லியன் நிதிகளை மாகாண நிதிக்கூடாக கொண்டு வந்துள்ளோம். கடந்த வருடம் அரைவாசி நிதியே கிடைக்கப்பெற்றது. மாகாணத்தில் அதிகாரத்தை எவ்வாறு, எங்கு பயன்படுத்த வேண்டும். அந்த அதிகாரத்தின் மூலமாக எவ்வாறு செயற்படுத்த வேண்டும், அதனை மாகாணத்தில் பரவலாக்கப்பட்ட ரீதியில் ஒதுக்கீடு செய்து வருகின்றோம்.

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல கோடிக் கணக்கில் துறைமுகத்தை சிங்கப்பூர் மெரினா துறைமுகம் போன்று மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையும் பாரிய அபிவிருத்தியை நோக்கியதாக எங்களது திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. வாகரைப் பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா வலயங்களை அமைப்பதற்காக நானும், பிரதமரும் கடல்மார்க்கமான சென்று பார்வையிட்டோம். இதற்காக பாரிய நிதிகளை கொண்டு வேலைத் திட்டங்களை செய்வதற்கு மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித் துறையில் 3600 மேற்பட்ட வேலைத்திட்டங்கள் நிரப்பப்படாமல் காணப்படுகின்றது. இதனை நிரப்புவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். சுகாதார துறையில் குறிப்பிட்ட காலத்தினுள் 348 வேலைகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எங்கெல்லாம் ஓட்டை உடைசல்கள் உள்ளதோ அதையெல்லாம் இனம்கண்டு அதனை அடைப்பதற்கு வழிகளை தெரிந்தவர்களாக காய்களை நகர்த்திக் கொண்டு வருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாணத்திலே ஒரு நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம். எங்களுக்குள் உறவுகளை பலப்படுத்தி வருகின்றோம்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களில் அபிவிருத்தியில் பின்தங்கிய மாகாணமாக கிழக்கு மாகாண சபை காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய எங்களுக்குள் இன ஒற்றுமை தேவைப்பட்ட விடயம். இனத்தை நோக்கிய பார்வையாக பார்ப்பதை விடுத்து நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரத்தம் தேவை எனில் அங்கு தமிழ், முஸ்லிம், சிங்கள இரத்தம் என்று கேட்பதில்லை. இன்னொரு மதத்தினுடைய இரத்தத்தை உள்வாங்க இருக்கின்ற எங்களது உள்ளங்கள் மனிதர்களாக பிரிந்து வாழ்கின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

யாராவது பசி என்று வந்தால் தமிழ் பசியா, முஸ்லிம் பசியா, சிங்கப் பசியா என்று கேட்காது வழங்குங்கள். எங்களுக்குள் உண்மையான உள்ளங்களை திறந்து பார்க்கின்ற போது இனவேறுபாடுகள் எங்களுக்குள் இருக்கும். வெறுமனே அரசியல் இலாபங்களுக்காக திணிக்கப்பட்ட விடயங்களை நாங்கள் தலையில் தூக்கிக் கொண்டு பிரித்தாடுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றவேண்டிய தேவைப்பாடு ஒட்டுமொத்த அரசியல் தலைமைகள், அதிகாரிகள், மக்களுக்கும் உண்டு. அவற்றையெல்லாம் மாற்றுகின்ற பொறுப்பை சுமந்தவர்களாக நாங்கள் இன்று மாகாணத்தில் வழிகாட்டியுள்ளோம்.

வடமாகாணத்தின் யாழ்ப்பாண நகரை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று அரசாங்கம் தேர்தலுக்கு திரிகின்றது போன்று திரிகின்றது. நான் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும், அவ்வாறு செய்கின்ற போது ஏறத்தாழ 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு நகரை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமரிடன் பேசியுள்ளேன் என்றார்.

Share This:
Loading...

Related Posts

Loading...