எனது சகோதரியை தேடித் தாருங்கள் – ஒரு தங்கையின் அழுகுரல்

Share this post:

saaaa

வீட்டுப் பணிப்பெண் தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவிற்குச் சென்ற பெண் ஒருவர் 3 வருடங்களான போதிலும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என குறித்த பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, புன்னைச்சோலை, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி (29) என்ற யுவதி கடந்த 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஊடாக வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியாவின் தமாமிற்கு சென்றுள்ளார்.

எனினும் குறித்த பெண் தொடர்பில் இது வரையிலும் தகவல்கள் தெரிவிக்கப்படாது, மறைக்கப்படுவதாக அவரது குடும்பத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவரது சகோதரி கந்தையா நிரோஜினி (26) கருத்து தெரிவிக்கையில்,

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதிஅரேபியாவுக்குச் சென்ற எனது சகோதரி கடந்த 3 வருடங்களாகியும் திரும்பி வரவுமில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக எதுவித தொடர்புகளும் இல்லை.

அங்கு தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எனது சகோதரியை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்.

அவர் தொழிலுக்கு சென்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மாதாந்த சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 6 மாதங்களுக்கான சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டது.

எனது சகோதரி சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை அவள் பணியாற்றும் வீட்டு எஜமானர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அதனால் போய்ச் சேர்ந்து 6 மாதங்கள் மட்டும் வீட்டு எஜமானர்களுக்குத் தெரியாமல் அவ்வப்போது எங்களுடன் தொடர்பு கொண்டார்.

ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக எனது சகோதரியுடனான எந்தத் தொடர்புகளும் இல்லை. சகோதரி பணிபுரியும் வீட்டுத் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளும் போது எந்த தகவலையும் அவர்கள் தருவது இல்லை.

இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் எஜமானர்களுக்குத் தெரியாமல் எங்களுடன் தொலைபேசியில் பேசும்போது தன்னை சவூதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு திரும்ப வரவழைக்குமாறு எங்களிடம் சொல்லி அழுதாள்.

இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னார்வ தொண்டர் நிறுவனம், மற்றும் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளோம்.

ஆனால், எமது சகோதரியை மீட்டுத் தருவதற்கான முயற்சியை எவரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவில்லை.

எமது குடும்பம் 1990ஆம் ஆண்டு கலவரத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளது. எமது பெற்றோர் வயோதிபர்களாக உள்ள அதேவேளை சகோதரிகளில் இருவர் நோயாளிகள்.

எனவே, எமது குடும்பத்தின் கஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடிச் சென்று சவூதி அரேபியாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எமது சகோதரியை மீட்டுத் தாருங்கள் என்று குறித்த பெண்ணின் சகோதரி மிகுந்த கவலையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776390527 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...