யாழ், கிளிநொச்சியில் கடனை கொடுத்துவிட்டு கடனை வசூலிக்க இரவில் வீடு புகுந்து தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள்..! வடக்கில் தொடரும் மக்களின் அவலம்..!

Share this post:

tamil

தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில் காத்திருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மாலை 7 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

மல்லாவியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றும், சாவகச்சேரி பகுதியிலிருந்து கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனம் ஒன்றும் இவ்வாறு செயற்படுவதாக குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களால் கிராமங்கள் தோறும் அதிக வட்டிக்கு வழங்கப்படும் பணங்களை செலுத்துவதற்கு மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறித்த பணத்தினையும் வட்டியையும் செலுத்துவதற்கு முடியாத நிலையில் மக்கள் வீட்டினை பூட்டி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று கிளிநொச்சி சட்ட உதவி ஆணைக்குழுவினரின் ஆலோசனைக்கமைய குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கடனை வழங்குவதற்கு முன்னர் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை தாம் செலுத்துவதில் எவ்வித மறுப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ள முறைப்பாட்டாளர்கள், இரவு நேரங்களில் பெண்கள் தனிமையில் இருக்கும் வீடுகளிலும் இரவு 12 மணிவரை காத்திருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடனை தவணைக்கு செலுத்த முடியாத நிலையில் வீட்டு உபகரணங்களை தருமாறு பெற்று செல்வதாகவும் தெரிவித்துள்ள முறைப்பாட்டாளர்கள், 2 வீடுகளில் தொலைக்காட்சிகளை பெற்று சென்றுள்ளதாகவும், குளிர்சாதன பெட்டியினை தருமாறு கோருவதாகவும் முறைப்பாட்டில் குறிப்படப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குறித்த நிலைமை காணப்படுவதாகவும், தொந்தரவு காரணமாக இன்று சட்ட உதவி ஆணைக்குழுவிடம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

5 மணிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் வீடுகளிற்கு சென்று இரவு நேரங்களில் அவர்களின் வீட்டில் காத்திருப்பது தொடர்பில் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு பதிவு செய்த பெண் ஒருவரின் மாதாந்த வருமானம் 20 ஆயிரமாக இருக்கையில், மாதாந்த கடன் தொகையாக 80 ஆயிரத்தினை செலுத்த வேண்டி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார்.

யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் பல்வேறு நிதி நிறுவனங்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் கிழமை மற்றும் மாத கடன்களை அதிக வட்டியில் வழங்கப்படும் பணங்களை பெறும் மக்கள், அவற்றை மீண்டும் செலுத்துவதற்கு கடினப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது,

யுத்தத்தின் பிடிக்குள் இருந்த மக்கள், தற்போது தென்னிலங்கை நிதி நிறுவனங்களின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் அலுவலகம் அமைக்கப்படாத நிதி நிறுவனங்கள், இவ்வாறு கடன்களை வழங்கும் செயற்பாடானது மக்களை ஏமாற்றும் செயலாகவே காண்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...