மனைவியின் துணையுடன் பேஸ்புக் மூலம் காதலித்து 10–க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கணவன்..!

Share this post:

;ove

முகநூல் மூலம் பழக்கும் ஏற்படுத்திக்கொண்டு 10–க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகளை பறித்த கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி மாயம்
திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் நவல்பட்டு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சில நாட்கள் கழித்து அந்த மாணவி, நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி தன்னை வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கற்பழித்ததோடு, தான் அணிந்திருந்த 2 பவுன் நகையையும் அபகரித்து சென்றதாகவும் அந்த வாலிபருடன் அவரது அக்கா என்று கூறிக்கொண்டு ஒரு பெண் இருந்ததாகவும் அவர்களின் புகைப்படத்தையும் கொடுத்து கதறி அழுதார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மாணவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் மகளை ஒப்படைத்தனர்.

போலீஸ் அதிகாரி உத்தரவு
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன், கல்லூரி மாணவியை கழ்பழித்து நகையை பறித்து சென்ற வாலிபரையும், அவருடன் உள்ள பெண்ணையும் தேடி கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் திருப்பதி, சென்னை, திருப்பூர், கோவை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சாதாரண உடையில் கல்லூரி மாணவி கொடுத்த அந்த வாலிபரின் புகைப்படத்தை வைத்து ஒரு மாத காலமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அந்த வாலிபரும், அவருடன் இருந்த இளம்பெண்ணும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அரசு பஸ்சில் இருந்து கீழே இறங்கியதை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

காதல் திருமணம்

விசாரணையில் அந்த வாலிபர் பரபரப்பான சில தகவல்களை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:–

எனது பெயர் குரு தீனதயாளன்(வயது27). திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிபாளையம் எனது சொந்த ஊர். தந்தை ராமச்சந்திரன். நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தேன். அப்போது பொழுதுபோக்கிற்காக முகநூல்(பேஸ் புக்) பக்கங்களில் அதிக அளவில் இளம்பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டேன். கடந்த 2013–ம் ஆண்டு முகநூல் பக்கம் மூலம் அறிமுகமான சென்னையை சேர்ந்த பிரியதர்சினி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின் உல்லாச வாழ்க்கைக்கு தேவையான பணம் என்னிடம் இல்லாததால் குறுக்கு வழியில் சம்பாதிக்க திட்டமிட்டு முகநூல் பக்கம் மூலம் அழகான பெண்களை கவர்ந்து அவர்களை, அவர்களது ஊருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைப்பேன். அப்போது என் அக்கா உன்னை பார்த்து சரின்னு சொன்னால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன், ஆகவே உன்னிடம் இருக்கும் நகைகளை அணிந்துகொண்டு வா என ஆசை வார்த்தை கூறினேன்.

இதில் மயங்கி வரும் பெண்களிடம், பிரியதர்சினியை தனது அக்கா என கூறி அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு அந்த பெண் விருப்பப்பட்டால் அவருடன் உல்லாசமாக இருப்பேன். முரண்டுபிடித்தால் அவரை, அவரின் விருப்பத்திற்கு மாறாக கற்பழித்து அதன்பின் அவர் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு வேறு ஊருக்குச் சென்று நகைகளை விற்று நாங்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்து வந்தோம்.

கணவன்–மனைவி கைது

கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த பெண்கள் மற்றும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டபின் வேலை தேடி அழையும் ஜோடிகளை கண்டுபிடித்து திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அந்த ஜோடியை பிரித்து திருமணமான அந்த இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருப்பேன். அவர்களிடம் பிரியதர்சினி நகைகளை பறித்துக் கொண்டு அனுப்பி வைப்பார்.

இதுபோல கடந்த 2014–ம் ஆண்டு முதல் இதுவரை 10–க்கும் மேற்பட்ட பெண்களை வேளாங்கண்ணி, தஞ்சாவூர், சென்னை, திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு வரவழைத்து கோவில் அருகில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து அவர்களிடம் நகைகளை பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்தோம். தற்போது போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு குருதீனதயாளன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்மூலம் போலீசார் குருதீனதயாளன், பிரியதர்சினி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...