திருடச் சென்ற வீட்டில் லைட்டிற்கு பதில் காலிங் பெல்லை அடித்த ‘அப்ரண்டீஸ்’ திருடன்!

Share this post:

thi

மும்பை அருகே திருடச் சென்ற வீட்டில் லைட்டை போட நினைத்து தவறுதலாக காலிங் பெல்லை அடித்து திருடன், வீட்டாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

மும்பை அருகே காட்கோபர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் முகுந்த். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த குடும்பம் சமீபத்தில் வெளிநாடு சென்றது. அந்த வீட்டின் சாவியும் முகுந்த் வசமே இருந்தது. இதனால் அடிக்கடி அங்கு வைத்து தனது உறவினர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் முகுந்த்.

எனவே, உறவினர்களின் வசதிக்காக அந்த வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு காலிங் பெல் வசதியை ஏற்படுத்தி வைத்துள்ளார் அவர்.

நள்ளிரவில் புகுந்த திருடன்
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு திருடன் ஒருவன் முகுந்தின் நண்பரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால், லைட்டைப் போட அவர் முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லைட் சுவிட்சிற்கு பதிலாக முகுந்த் வீட்டுடன் இணைக்கப் பட்டிருந்த காலிங் பெல்லை அவர் அழுத்தி விட்டார்.

பூட்டிய வீட்டில் காலிங் பெல்
காலிங் பெல் சத்தம் கேட்டு, அதிர்ச்சி அடைந்த முகுந்த், ஆள் இல்லாத தன் நண்பரின் வீட்டில் மர்ம நபர் யாரோ நுழைந்திருப்பதை உணர்ந்து கொண்டார். சாதுர்யமாக செயல்பட்ட முகுந்த், நண்பர் வீட்டுக் கதவை வெளிப்புறமாகப் பூட்டினார். பின்னர் பாண்ட் நகர் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

மடக்கிப் பிடித்த போலீஸ்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முகுந்தின் நண்பர் வீட்டில் புகுந்திருந்த கொள்ளையனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

32 வயது திருடன்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திருடச் சென்ற நபரின் பெயர் ஸ்ரீகாந்த் கைரே என்ற ஷிரியா (32) என்பது தெரியவந்தது. தற்போது போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...