வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் பெற்றோரும் உருவாகும் சமூக சீர்கேடுகளும்…

Share this post:

sawthgi

தான் பெற்ற மழலைச்செல்வங்களைப் பரிதவிக்கவிட்டு, தொலைதூரத்திலுள்ள குழந்தைகளுக்குத் தாயாகி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பல தாய்மார்களின் எதிர்பார்ப்பு தனது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே.

அதுவும் பெண்பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. மகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும், அவளை நல்ல இடத்தில் மணம் முடித்து வேண்டும், என்றெல்லாம் அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

ஆனால், பெண்பிள்ளைகளுக்கு வளரும் பருவத்தில் தாயின் அன்பும், பாதுகாப்பும் அவசியம் தேவையென்பதை பல தாய்மார்கள் மறந்து விடுகின்றார்கள்.கணவன், அத்தை, தங்கை, என்று தன்னைச் சுற்றியுள்ள உறவினர்களின் பாதுகாப்பில் பெண்பிள்ளைகளை விட்டு கடல் கடந்து தொழிலுக்காக செல்கின்றார்கள்.

எனினும், துரதிஷ்டவசமாக வேலியே பயிரை மேய்வது போல் பெண்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவிருந்த உறவுகளினாலேயே அவர்கள் துஷ்பியோகங்களுக்குட்படுவதும், தாயின் அன்பை காதலன் உருவத்தில் காணச்சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்வதும் தொடர் கதையாகவுள்ளது.

இவ்வாறான பின்னணியில் உள்ள பரிதாபகக் கதையொன்றுதான் இது.

சிறைச்சாலை வாளாகத்திலுள்ள மரத்தடி நிழலில் தனது மகளின் விடுதலைக்காக வாடிய முகத்துடன் காத்திருந்தாள் இந்துனி. அவருடன் கதைக்க முற்பட்ட போது, மிக நீண்ட அமைதிக்கு பின்னர் தனது மகளின் வாழ்வில் அரங்கேறிய அவலத்தை மனம் திறந்து கூறத் தொடங்கினார்.

ஆண் கெட்டால் சம்பவம் பெண் கெட்டால் சரித்திரம் என்று எண்ணும் ஒரு சமூகத்தில் தான் இன்றும் நாம் வாழ்ந்து வருகின்றோம். அதனால் எனது மகளுக்கு நடந்த கொடுமைகளை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியவில்லை.

என்னுடைய சொந்த ஊர் கொழும்பு. நான் கல்விப்பொதுத்தாராதர உயர்தரப் பரீட்சை எழுதிய கையோடு என்னுடைய உறவுக்கார மச்சான் முறையிலான ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

எனது கணவன் ஒரு ஆசிரியர். திருமணத்திற்குப் பின்னர். எனது கணவருக்கு மிகவும் பின்தங்கிய கிராமமொன்றுக்கு ஆசிரியர் இடமாற்றம் கிடைத்ததால் நாங்கள் அந்தக் கிராமத்தில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று குடியேறினோம்.

சில மாதங்களின் பின்னர் நான் கருவுற்றேன். எனவே நான் அங்கு இருப்பது பாதுகாப்பு இல்லையென்ற காரணத்தினால் எனது கணவரின் வற்புறுத்தலில் எனது பிறந்த வீட்டிக்கு வந்தேன்.

ஆனால்,அதன்பின்னர் என்னுடைய கணவர் என்னை விட்டு விலகிச் செல்வதை நான் உணர்ந்தேன். பாடசாலை விடுமுறை நாட்களில் கூட அவர் என்னைப் பார்க்க வருவதில்லை.

நான் எத்தனையோ கடிதங்களை அவருக்கு எழுதிய போதிலும் அவற்றுக்குப் பதில் வருவதில்லை .எனக்கு அது வேதனையளித்தது. இறுதியில் எனது பிரசவ நாளும் நெருங்கியது .

பிரசவத்தின் போது நான் அழகிய பெண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்தேன்.அப்பா எனக்கு குழந்தை பிறந்திருப்பதை கூறி அவரை அழைத்துவர அவர் இருந்த கிராமத்துக்குச் சென்றார்.

அப்போது தான் எனது கணவருக்கும் அந்தக் கிராமத்திலுள்ள பெண்ணொருவருக்கும் இரகசியத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அப்பா வந்து என்னிடம் கூறினார்.

அது எனக்கு முதலில் வேதனையாய் இருந்த போதும், நான் எனது மகளுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.எனினும் மாமா அவரை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்த்து வைப்பதாகக் கூறினார்.

நான் அதற்கு உடன்படவில்லை. நான் எனது அம்மா, அப்பா, தங்கையுடன் வீட்டில் இருந்தேன். அப்பாவின் உழைப்பில் மகளின் செலவுகளையும் பார்த்துக்கொண்டேன்.

எப்படியோ காலச் சக்கரம் விரைவாக ஓடியது. எனது மகள் பாடசாலை செல்லும் வயதை அடைந்தாள். அப்போது அவளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.

எனினும், தொடர்ந்து அப்பாவை கஷ்டப்படுத்த நான் விருப்பவில்லை. எனவே நான் வெளிநாடு செல்ல முடிவெடுத்தேன்.அதன்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்ல ஆயத்தமானேன்.

அப்போது மகளுக்கு நான்கு வயது தான் இருக்கும். அவளின் பிஞ்சு முகத்தை பார்த்தவுடன் அவளை விட்டுச் செல்ல என் மனம் ஆரம்பத்தில் இடம்கொடுக்கவில்லை.

எனினும், அவளின் எதிர்காலத்துக்காக நான் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் எனது மனதை கல்லாக்கிக்கொண்டு மத்தியகிழக்கு நோக்கிப் பயணமானேன்.

அப்போது எனது அம்மாவும் தங்கையும் மகளுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.நான் போன இடத்தில் எனக்கு எந்தவித பிரச்சினைகளும் இருக்கவில்லை.

நான் மகளினதும், எனது பெற்றோரினதும் செலவுகளுக்கு மாதாந்தம் பணம் அனுப்பினேன்.அடிக்கடி மகளின் நினைவுகள் வந்து என்னை நிலைக்குலைய வைக்கும்.

அப்போதெல்லாம் அவளின் புகைப்படத்தைக் கட்டியணைத்து எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன். இவ்வாறு வருடக்கணக்கில் என்னுடைய வாழ்க்கை வெளிநாட்டிலேயே கழிந்தது.

இது இவ்வாறிருக்க மகள் பருவமடைந்தால் , எனது மகளுக்கு நல்லதொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும், சீதனத்துக்கு வீடு, நகைகள் சேர்க்க வேண்டுமென்று என்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகமாகின.

இது இவ்வாறிருக்க, எனக்கு ரூபசிறி என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ரூபசிறி திருமணமாகி மனைவியை இழந்து யாருடைய துணையுமின்றி தனியாக வாழ்ந்தார்.

எனவே, என்னைத் திருமணம் செய்துகொண்டு மகளையும் ஏற்றுக்கொண்டு ஒரே குடும்பமாக வாழ ரூபசிறி விரும்பினார். மகளுக்கு ரூபசிறி மூலம் தந்தையொருவரின் அன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

அதன்படி நாங்கள் இருவரும் இலங்கைக்கு வந்து எனது குடும்பத்தவர்களின் சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டு மீண்டும் வெளிநாட்டுக்கு பயணமானோம்.

மகளின் கல்விப்பொதுத்தாரதர சாதாரணதரப் பரீட்சைக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியிருந்த வேளையில் என்னுடைய தங்கையிடமிருந்து எனக்கு கடிதமொன்று வந்தது.

அந்தக் கடிதத்தில் மகளின் நடத்தையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். அவள் யாரோ ஒரு இளைஞனைக் காதலிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனக்கு அது சற்று குழப்பமாகவிருந்த போதும் மகளுக்கு சொல்லி புரியவைக்க முடியும் என்று நினைத்தேன். அதன்பின்னர் பல கடிதங்களை மகளுக்கு அனுப்பினேன். எனினும், அவை எதற்குமே பயனிருக்கவில்லை.

ஒரு நாள் தங்கை நான் பணிபுரிந்த வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மகள் அந்த இளைஞனுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டாள், அவன் நல்லவள் அல்ல என்றும் கூறி அழுதாள்.

அதன்பின்னர், என்னுடைய மகள் எங்கு சென்று விட்டாளோ அவளுக்கு என்ன நடந்திருக்குமோ என்று அறியாதவளாய் மகள் வீட்டை விட்டு சென்று ஒரு மாத நிறைவில் நான் இலங்கைக்கு வந்து சேர்ந்தேன்.

அதன்பின் மகளை நானும், தங்கையும் இணைந்து எங்கெல்லாமோ தேடி அலைந்தோம். ஆனால், மகள் பற்றி எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. மகள் காதலித்த இளைஞன் வீட்டுக்கும் சென்று தேடினோம்.

அங்கு ‘அவனை வீட்டை விட்டே நாங்கள் ஒதுக்கி வைத்துவிட்டோம் அவனை தேடி யாரும் இங்கு வராதீர்கள்’ என்று அவருடைய பெற்றோர் எங்களைத் திட்டி அனுப்பிவிட்டார்கள்.

இப்படி எல்லா முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் இருக்கும் போதே ஒரு நாள் மகளிடமிருந்து கடிதமொன்று வந்தது.அந்தக் கடிதத்தில் நான் சிறையிலிருக்கின்றேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகள் எழுதியிருந்தாள்,

அதன்பின் தான் நாங்கள் இங்கு வந்து மகளைச் சந்தித்தோம்.மகளைக் காதலிப்பதாகக் கூறி அந்த இளைஞன் போலி நாடகமொன்றை அரங்கேற்றி பின்னர் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச்சென்று, விபசார விடுதியொன்றுக்கு மகளை விற்றிருக்கின்றான்.

அங்கு வைத்து தான் மகள் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு வந்திருக்கின்றாள்.இது நான் சிறைக்கு வரும் இரண்டாவது தடவை. இன்று எப்படியும் மகளுக்கு விடுதலை கிடைத்துவிடும்.

ரூபசிறி மகளை வெளிநாட்டுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கின்றார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டோம்.

இடமாற்றம் நிச்சயம் மகளுக்கு கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க வழிசெய்யும். மகளுக்கு நிச்சயம் நானும் ரூபசிறியும் புதிய வாழ்க்கையொன்றை பெற்றுக்கொடுப்போம்.

இவ்வாறு கண்ணீருடன் கூறி முடிந்தாள் இந்துனி .

அவருடைய தளராத நம்பிக்கை இனிமேலும் பொய்யாகிவிட கூடாது என்ற பிரார்த்தனையுடன் அவளிடமிருந்து நாம் விடைபெற்று வந்தோம்.

Share This:
Loading...

Related Posts

Loading...