யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற சிங்கள தமிழ் மாணவர்களுக்கு இடையிலான சண்டைக்கு பின்புலம் என்ன?.. – விரிவான ஆய்வு…

Share this post:

yaal

புலிகளை அழித்துவிட்டால் நாட்டில், அமைதி, சமாதானம், நல்லிணக்கம், இன ஒற்றுமைகள் வந்துவிடும் அல்லது அடைந்துவிட்டோம் என்பது பொய் என்பதை அடுத்தடுத்து நாட்டில் நிலவும் நிகழ்வுகள் திடமாக எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை மூவினங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனால் மூவினங்களிடத்திலும், மேலிடம் ஓரிடமாக இருப்பின் அவ்விடம் நிச்சையமாக அடக்கி ஆளும் சிந்தனையில் தான் இருக்கும் என்பதை இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கையில் நல்லிணக்கம் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டது. அதனை சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க இலங்கை அரசாங்கம் பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டது.

ஆனால், சிங்களத்தின் மீதும், பௌத்தத்தின் மீதும், கொண்ட தீவிர காதல் கோத்தபாய ராஜபக்சவை புலியழிப்போடு நிறுத்திக் கொள்ளவில்லை. நல்லிணக்கம், மீள்கட்டுமானம் என்று தொடங்கிய சிங்கள மேலாதிக்க சிந்தனை, ஒரே நாடு, ஒரே தேசம் என்று பறைசாற்றி, இந்த நாட்டில், ஒரே இனம், ஒரே மதமாக்கியது.

யுத்தம் முடிந்த கையோடு, சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கின் பெரும்பகுதிகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் குடியேற்றப்பட்டார்கள்.

இவ்விடத்தில், இனவாதம் பேசவில்லை நாம். இலங்கையில் எந்தப் பகுதியில் எவர் வேண்டுமானாலும் வாழலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அது எந்த காலத்தில்? எப்படி நிகழ்கின்றது என்பது தான் இங்கே நோக்குதற்கு உரியது.

இலங்கை முழுவதும், தமிழ், முஸ்லிம் மக்கள் பரந்து வாழ்கின்றார்கள். அவர்கள் தங்கள் பிறப்பிடம், மற்றும் பூர்வீக குடியிருப்பின்படி தமது இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கில் யுத்தம் முடிந்த கையோடு, பெருந்தொகையான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டது தான் இலங்கை அரசாங்கம் செய்த மிகப் பெரியதோர் திட்டமிட்ட சூழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நிரல்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர், அரசாங்கம் முதலில் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்க முன்வந்திருக்க வேண்டும். போருக்கும், ஆயுத மோதல்களுக்கும், காரணம் யாதென்பதை கண்டறிந்து அதற்கான மூல வேரினை அறிந்து, பரிகாரம் தேடியிருக்க வேண்டும்.

தமிழ் இளைஞர், யுவதிகள் ஏன் அகிம்சையை கைவிட்டு, ஆயுதத்தினை கையில் எடுத்தனர் என்பதற்கான விடைக்கான கேள்வியினை கண்டறிந்து, மீண்டும், ஆயுதமோ, வன்முறையோ நாட்டில் தேவையில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்குமாயின், போர் முடிந்த கையோடு அரசியல் பிரச்சினைக்கான தீர்வு எட்டபட்டிருக்கும்.

ஆனால் அதற்கு மாறாக தான் அரசாங்கம் சிந்தித்தது. இலங்கை முழுவதும், சிங்கள மக்களை குடியேற்றுவதும், இலங்கையின் தமிழ்ப் பல்கலைக்கழகங்களான கிழக்கு, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கலாம் என முடிவு செய்தது.

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்த சண்டை உணர்த்துவது என்ன? ஏன் சண்டை வந்தது? சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களுக்கு எதிரியா? இல்லை தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களுக்கு விரோதியா????

இது தான் கேள்வி….! இதை சரியான பின்புலத்தோடு அணுக வேண்டுமே தவிர, வெறும் இனவாதமாக அரசாங்கம் பார்க்க கூடாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தின் மூல வேராக விளங்குகின்றது என்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமும் இங்கிருந்து தான் தொடங்குகின்றது. விடுதலைப் போராட்ட தொடக்கத்தில் இருந்து, இன்று வரை யாழ். பல்கலையின் தமிழினத்தின் விடுதலையில் அளப்பரிய பங்காற்றியிருக்கின்றது.

ஆனால், இன்று அப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் தொகையோ தமிழ் மாணவர்களின் தொகைக்கு நிகராக நிரப்பட்டுள்ளார்கள். இன்னும் சிறிது காலத்திற்குள் சிங்கள மாணவர்களே பெரும்பான்மையான மாணவர்களாகியிருப்பார்கள்.

இவ்விடத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமையை தவறு என்றோ அன்றி, சிங்கள மாணவர்கள் தமிழர் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடாது என்றோ வாதிடவில்லை.

மாறாக, இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிந்த கையோடு, சிங்கள மாணவர்களையும், மக்களையும் தமிழர் பகுதிக்குள் அனுப்புவதற்கு காட்டிய அக்கறையினை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் ஈடுபாடு காட்டி பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வினை எட்டிய பின்னர்,

வடக்கு கிழக்கில் மாணவர்களின் கற்கைகளுக்கு அனுமதியளித்திருக்கலாம். நீண்டகாலமாக மனதின் வடுக்களாக மாறிப்போன இனப்பிரச்சினை தீ, நெஞ்சில் குடைந்து கொண்டிருக்க, அந்த தீக்கு மருந்து கொடுக்காமல், மேலும், அதை பெரிதாக்க நினைப்பதன் விளைவு தான் இது.

முள்ளிவாய்க்காலில் அத்தனையையும் இழந்து சோகத்தோடு பயணிக்கும் தமிழ் இனம், தன் இருப்பின் அடையாளமாக, தங்கள் சொத்தின் இருப்பிடமாக, அறிவாலயமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கத்தில் தங்களின் மேலாதிக்கத்தை காட்ட முனைந்தால், எப்படி பொருத்துக் கொள்வார்கள்.

இதை இன்னொருவிதமாக நோக்கலாம். இதுவரை காலமும், இது சிங்கள பௌத்த நாடு என்று நினைத்திருந்த பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த சகோதர மாணவர்கள் தமிழர் பகுதியில் படிக்க வந்ததன் பின்னர், தமிழர், கலாச்சாரம், பண்பாடு, நிகழ்வுகளை எவ்வாறு நோக்குவார்கள். அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

நாங்கள் தான் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள். இது எங்கள் நாடு. எங்கள் பௌத்த மதம் தான் மேலானது. எங்கள் கலாச்சாரத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்னும் சிந்தினையில் வாழ்ந்த பிள்ளைகளை தமிழ் மக்களின் தாயக பூமிக்கு அனுப்பி வைத்தால் அவர்களின் மனதில் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தான் பிரச்சினைகளுக்கான மூலகாரணம். இவ்விடத்தில் சிங்கள தமிழ் மாணவர்கள் மோதிக்கொண்டதும் அதற்காக தான். சகிப்புத் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவர்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை என்பது தான் நிறுத்திட்டமான உண்மை.

பள்ளிக் கூடத்தில் இருந்து, மத வழிபாட்டு விகாரை ஈராக, அரசியல் மேடை வரை பௌத்த, சிங்கள நாடு என்று எடுத்துரைத்தே வளர்த்துவிட்டு, அவர்களை அதோடு தொடர்பில்லாத இடத்திற்கு அனுப்பி வைத்தால் மீண்டும் கலவரங்களும், சண்டித்தனங்களும் ஏற்படவே செய்யும்.

நாட்டில் உண்மையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு, இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டிருக்குமானால் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுக்கு வாய்ப்பே இன்றி போயிருக்கும்.

இது தமிழ் மக்களுக்கும் சொந்தமான தேசம். அவர்களும் இந்த தேசத்தின் குடிகள். அவர்களுக்கென்றொரு, கலாச்சாரம், பண்பாடு இருக்கின்றது. அதனை அவர்கள் பின்பற்றுவதற்காக உரித்துடையவர்கள் என்று அவர்கள் உணர்ந்திருப்பார்களாயின், நாட்டில் மீண்டும் மீண்டும் வன்முறைகளுக்கு இடமிருக்காது.

ஆனால் அதனை ஆற்றுப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவேயில்லை. அது வன்முறைகளை கொண்டு தான் குளிர் காய்ந்து கொள்ள நினைக்கிறது. இதற்கு மாணவர்களும் இளைஞர்களும் தான் இரையாக வேண்டியிருக்கின்றது.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை நாளை, சிங்கள இணைய ஊடகங்களும், இனவாதத்தையே பிரதான தொழிலாக கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு அணுகுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

நாட்டில் சிங்களத்திற்கும், பௌத்தத்திற்கும் மரியாதை அற்றுப் போகின்றது. புலிகள் மீள் உருவாகின்றார்கள் என்றெல்லாம் கூப்பாடு போடப்போகின்றார்கள். அதை வைத்து ஊடகங்களும் நன்றாகவே வைத்து செய்வார்கள். இது இனவாதிகளுக்கான துருப்புச்சீட்டு.

ஆனால், வடக்கில் நடந்தது இனவாதம் என்பார்கள். பயங்கரவாதம் என்பார்கள். ஒருவேளை இதே நிகழ்வு கொழும்பில், நடந்தால்? தமிழ் மாணவர்களின் கதி என்ன?

ஆக, அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டமிது. புலிகளை அழித்தால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து நல்லிணக்கம் வந்துவிட்டது என்று பொருள் அல்ல.

இந்த நாட்டில் எங்களைப் போன்று, தமிழ் மக்களுக்கும், உரிமை உரித்து உண்டு என்று பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்த பிள்ளைகள் மனதில் விதைக்கும் வரை அது வன்முறையாகவே வெடிக்கும்.

ஏனெனில் இனவாதம் இலங்கையில் இன்று நேற்று விதைக்கப்பட்ட ஒன்றல்ல. அது விதைத்து விருட்சமாகி, வேர்கள் பரந்து கிளைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. அதை வெட்டி அழித்து, மாற்றத்தை கொண்டு வராதவரை, எப்படியான அமைதியான சூழலிலும் வன்முறை வெடிக்கும்.

மீண்டும், ஆயுத கலாச்சாரத்திற்கு இழுத்துச் செல்லாதீர்கள். வன்முறை ஆபத்தானது. அதைவிட ஆபத்தானது இனவாதம். மனங்களில் மாற்றத்தை கொண்டுவந்த பின்னர், எதுவேண்டுமென்றாலும் செய்யுங்கள்.

வளரும் பிள்ளைகளின் மனதில் உரிமைகள் தொடர்பில் எடுத்துரையுங்கள். அதை முடித்துவிட்டு, மாணவர்களை இணைத்துப்பாருங்கள். நெஞ்சில் வஞ்சனைகள் இருக்கும் போது இணைத்தால் இரண்டும் ஒட்டாது.

இருபக்கமும், மனதில் வடுக்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் இழந்த, இழந்து கொண்டிருக்கின்ற ஆற்ற முடியாத சோகம். இன்னொரு புறம் எங்கள் நாடு, எங்கள் மதம், எங்கள் இனம் என்னும் இறுமாப்பு. இரண்டிலும் மாற்றம் கொண்டு வந்தாலே இலங்கை அமைதியடையும். அதுவரை வன்முறைகள் அங்கங்கே தலைகாட்டவே செய்யும்.

Share This:
Loading...

Related Posts

Loading...