2008ல் கடத்தப்பட்ட 5 மாணவர்களும் உயிருடனுள்ளதாக Viber இல் வந்த செய்தி..!

Share this post:

viber

கடந்த 2008ம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

கடந்த 10ம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக தாம் இந்த செய்தியை அறிந்து கொண்டதாக கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் தெரிவித்தார்.

ஐந்து மாணவர் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் வழக்கு முடிந்து வெளியே வந்த போதே குறித்த பெற்றோர் இதனைத் தெரிவித்தனர்.

அதனால் தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும் அவசரமாக அவர்களை மீட்டுத் தந்தால் போதுமானது எனவும் அப்பெற்றோர் உருக்கமாக தெரிவித்தனர்.

ராஜீவ் நாகநாதன் , பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் இராமலிங்கம் ஆகியோருடன் மொஹமெட் சஜித், மொஹமட் டிலான் ஆகிய ஐந்து மணவர்கள் உள்ளிட்ட 11 பேர் 2008ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலைநகரின் பல பிரதேசங்களில் இருந்தும் கடத்தப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கபப்டுகிறது.

எனினும் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை. இந் நிலையிலேயே கடந்த 10ம் திகதி இரவு வைபர் ஊடாக ராஜீவ் நாகநாதன் என்ற கடத்தப்பட்ட மாணவனின் தாய்க்கு வைபர் ஊடாக அவரது மகன் உள்ளிட்ட ஐவரும் உயிருடன் இருக்கும் செய்தி அனுப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதனைவிட குறித்த ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , அவர்களை மீட்டுத் தருமாறும் பெற்றோர் கோரியுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...