தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு – இனியாவது இவர்கள் சிறந்த சேவையை வழங்குவார்களா?

Share this post:

bus

தனியார் பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இப்பஸ் கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி தற்போது எட்டு ரூபாவாக உள்ள ஆரம்ப பஸ் கட்டணம் ஒன்பது ரூபாவாக அதிகரிக்கப்படும்.

ஏனைய கட்டண அதிகரிப்பு தொடர்பிலான பட்டியலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பத்திரிகைகளில் விளம்பரமாக விரைவில் வெளியிடும் என்று போக்குவருத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் பஸ் கட்டண அதிகரிப்பைக் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க வேலைநிறுத்த முஸ்தீபுகளை ஏற்கனவே மேற்கொண்டனர்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி- மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடாத்திய கலந்துரையாடலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அத்தொழிற்சங்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

ஜனாதிபதி தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பஸ் கட்டணம் தொடர்பில் புதிய பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்தார்.

அக்குழுவினர் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடனும், அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தயாரித்த அறிக்கை அமைச்சரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையை அமைச்சரவைக்கு அமைச்சர் சிறிபால டி சில்வா சமர்ப்பித்தார்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து 6 வீதக் கட்ட அதிகரிப்புக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது.

இப்பஸ் கட்டண அதிகரிப்பு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்திருக்கும். ஆனால் இவ்வதிகரிப்பு தீர்மானத்தை நாட்டு மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

பொதுவாக எரிபொருள் விலையேற்றம் நாட்டில் ஏற்படுமாயின் அதனை அடிப்படையாகக் கொண்டு பஸ் கட்ட அதிகரிப்பு கோரிக்கை மேலெழுவதும் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதும்தான் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் ஒழுங்கு.

ஆனால் இம்முறை எரிபொருள் விலையேற்றம் இடம்பெறாத நிலையில்தான் தனியார் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இவ்வதிகரிப்புக்கென டொலர் பெறுமதி அதிகரிப்பு, டயர் விலையேற்றம் உள்ளிட்ட வேறு காரணங்களே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வதிகரிப்பு பாடசாலை வான் சேவை, முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய தனியார் வாகனப் பயணக் கட்டணங்களிலும் செல்வாக்குச் செலுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அது தம் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதே மக்களின் அச்சத்திற்கான காரணமாக உள்ளது.

அதேநேரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் பயணக் கட்டணத்தை அதிகரிப்பதில் காட்டுகின்ற ஆர்வத்தைப் போன்று பயணிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பதில் காட்டுகின்றார்களா என்ற கேள்வியும் நிலவத் தான் செய்கின்றது.

பெரும்பாலான தனியார் பஸ் வண்டிகளில் பயணிகளின் நலன்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக பஸ் ஆசனங்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்றுதல், பயணிகளை ஆடு மாடுகளைப் போன்று நெரிசலாக ஏற்றுதல், எல்லை மீறிய சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்தல் போன்றன அவற்றில் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள்.

இவை இவ்வாறிருக்க, பெரும்பாலான தனியார் பஸ் வண்டிகள் பணமீட்டுவதை அடிப்படையாகக் கொண்டு ஒன்றையொன்று முந்திச் செல்லவென போட்டி போட்டு ஓடுகின்றன.

இவ்வாறான வண்டிகள் வீதிப் போக்குவரத்து சட்டங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவதில்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் வீதி விபத்துகள் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய ஆபத்து மிக அதிகம்.

ஆனால் இந்நிலைமைகளைத் தவிர்த்து பயணிகளுக்கு சிறந்த சேவை அளிக்கப்பட வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை இப்பஸ் கட்டண அதிகரிப்பின்படி எட்டு ரூபாவாகக் காணப்படும் ஆரம்பக் கட்டணம் ஒன்பது ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பஸ் நடாத்துனர்கள் தான் பெரும்பாலும் நன்மை பெறுவர்.

தற்போது எட்டு ரூபாக் கட்டணத்திற்காக பத்து ரூபா வழங்கப்பட்டால் இரண்டு ரூபா மீதியைச் சில நடத்துனர்கள் மட்டுமே வழங்குகின்றனர்.அநேக நடத்துனர்கள் சில்லறை இல்லை என சாக்குக் கூறுகின்றனர்.

ஆகவே ஒன்பது ரூபா ஆனதும் ஒரு ரூபா மீதி என்ற பேச்சுக்கு நடத்துனர்களிடம் இடமிருக்குமோ தெரியவில்லை என்பது மக்களின் அபிப்பிராயமாக உள்ளது.

ஆகவே கட்டண அதிகரிப்பில் கவனம் செலுத்துவது போன்று பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பு மிக்க போக்குவரத்து சேவை வழங்குவதிலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...