காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் – ஒன்றாக ரெயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி…

Share this post:

love

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவையில் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.

2 வருட காதல்

தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை தேயிலை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகமாணிக்கம். இவருடைய மகன் வடிவேல் என்கிற திவாகர் (வயது 20). இவர் பெங்களூருவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தார். அது பிடிக்காமல் தற்போது ஊட்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி படிப்பதற்காக விண்ணப்பித்து உள்ளார்.

கோத்தகிரி சிவானந்தபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரனின் மகள் ரம்யா (19). இவர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ரம்யாவும், திவாகரும் கடந்த 2 வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

கடும் எதிர்ப்பு

இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்தனர். இதனால் திவாகரும், ரம்யாவும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் கோவை வந்தனர்.

காதல்ஜோடியினர் போத்தனூர் கணேசபுரத்தில் உள்ள திவாகரின் மாமா ராஜனின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு கணேசபுரம் பகுதிக்கு சென்றனர். ஆனால் திடீரென அவர்கள் முடிவை மாற்றி கணேசபுரத்தில் உள்ள தண்டவாளம் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

தற்கொலை

நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நம்மை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அதனால் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர். அதன்படி நள்ளிரவில் ரெயில் முன்பு காதல் ஜோடியினர் தங்கள் கைகளை கோர்த்தபடி பாய்ந்தனர். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...