வெளிநாட்டவர்களை எச்சரித்த ஜனாதிபதி மைத்திரி..!

Share this post:

janathipathui

வெளிநாட்டவர்களின் தேவைக்கேற்ப அரச நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பேராதனையில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கோ, வெளிநாட்டவர்களின் தேவைக்கேற்ப அரச நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்யவோ இடமளிக்கப்பட மாட்டாது.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் உள்நாட்டு நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்ய முடியாது. அப்படியாயின் அதற்கு அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான ஒரு மாற்றத்திற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளியேன்.

மேலும், நாட்டில் இன்னும் ஒன்பது மாதங்களில் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் நிறுவப்படுமென ஒரு பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. சில விடயங்களில் ஊடகங்கள் பொறுப்பற்று செயற்படுகின்றமை வேதனையான விடயம்.

நாட்டை கட்டியெழுப்பும் வகையில் காத்திரமான கருத்துக்களை முன்வைத்து, மக்களுக்கு அதற்கான பலத்தை வழங்கும் வகையிலேயே ஊடகங்களின் கருத்துக்கள் அமையவேண்டும்’ என்றார்.

உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு இடம்பெறாதென ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றமையானது பாதிக்கப்பட்டோர் மற்றும் நீதியை நாடி நிற்போர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...