காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் ! பேருந்தில் இருந்து குதித்து மாணவி மரணம்!

Share this post:

pen

கல்லூரிப் பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சேலம் கல்லூரி மாணவி, தன் மரணம் குறித்து காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், ஆத்தூரையடுத்த கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் பிரியதர்ஷினி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

தினமும் கல்லுாரிக்கு கல்லூரிப் பேருந்தில் சென்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி, வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார் மாணவி பிரியதர்ஷினி.

பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே மாணவி பிரியதர்ஷினி திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

ஆரம்ப விசாரணையில், மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவே வழக்குப் பதிவானது. ஆனால் தொடர் விசாரணையில் மாணவி பிரியதர்ஷினி, தான் படித்த அதே கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வந்த அரவிந்த் (22) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, மாணவி பிரியதர்ஷினி தன் மரணம் குறித்து காதலன் அரவிந்த்துக்கு எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

3 பக்கம் எழுதப்பட்ட அந்த கடிதத்தில்,

டியர் அரவிந்த், என்னை எந்த வார்த்தையெல்லாம் பேசக் கூடாதோ அந்த வார்த்தையெல்லாம் நீ பேசிட்ட. இருந்தாலும் எனக்கு உன்மேல இருந்த லவ் குறையல.

நீ எந்த அளவுக்கு உன் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கியோ அதே அளவு நான் உன் மேல வைச்ச லவ் உண்மை. அதை என்னால் மறக்க முடியல.

என் லவ்வ கடைசி வரைக்கும் நீ புரிஞ்சிக்கல. ஆனா இப்போ என்னோட உயிர கொடுத்து என் லவ்வ நிரூபிக்கப் போகிறேன்.

இவ்வளவு நாள் சேர்ந்து சுத்தினோம். ஜாலியா என்ஜாய் பண்ணினோம். அது மட்டும் லவ் இல்ல. எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் அந்த தைரியம் உன்கிட்ட இல்லப்பா,

இருந்தாலும் உன் கூட நான் வாழ்ந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா,

அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சப் பாசம், என் லவ்வை நீ புரிஞ்சிக்கும்போது அத நான் பார்த்து சந்தோஷப்பட முடியாது. ஏனா நீ இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

உன் கூட உன் பொண்டாட்டியா ஒரு நாள் வாழ்ந்துட்டேன். அது போதும். இந்த ஜென்மத்துல அந்த சந்தோஷத்தோடு நான் போறேன்டா.

எப்போது நான் இருந்த இடத்தில் இன்னொருத்திய உன்னால் நினைக்க முடியுமுன்னு நீ நினைச்சியோ அப்போதே செத்துட்டேன்.

இது வெறும் பொணம். இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான். நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும்.

நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா என்று மனதை உருக்கும் விதமாக எழுதியிருந்தார்.

இதையடுத்து காதலித்துவிட்டு பின் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால்தான், பிரியதர்ஷினி தற்கொலை செய்துகொள்ளத் துாண்டப்பட்டார் என்ற கோணத்தில் காதலன் அரவிந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

கல்லுாரிக்கு ஒரே பேருந்தில் சென்றபோது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி பிரியதர்ஷினிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். எனவே பிரியதர்ஷினி அரவிந்தை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அரவிந்த் மறுத்ததாக தெரிகிறது.

தற்கொலை செய்துகொண்ட அன்று காலையிலும் பிரியதர்ஷினி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அரவிந்திடம் மன்றாடிக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அரவிந்த் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பிரியதர்ஷினி, ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாணவி பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் அரவிந்த் மீது மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...