கொள்ளையர்களால் பரிதாபமாக பலியான ஆசிரியை நந்தினியின் சோகக் கதை!

Share this post:

nanth

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. எம்.சி.ஏ பட்டதாரியான இவர், நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நந்தினிக்கு நேற்று முன்தினம் சம்பள நாள் ஆகும். சம்பள பணத்தை ஏ.டி.எம்.-ல் எடுப்பதற்காக தனது அத்தை மகள் காயத்திரியுடன் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மந்தைவெளிக்கு சென்றார்.

நந்தினியின் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் ஏ.டி.எம். மையத்தில் ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து ஒரு பையில் போட்டு காயத்திரி கையில் வைத்திருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் ஒருவன், மோட்டார் சைக்கிளில் பின்னாடியே விரட்டி வந்து காயத்திரி வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு வேகமாக செல்ல முயன்றான்.

ஆனால் நந்தினி விட்டு விடாமல் தொடர்ந்து கொள்ளையனை விரட்டி சென்றார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதி அருகே கொள்ளையன் வலது புறமாக திரும்பிவிட, வேகமாக வந்த நந்தினியால் திரும்ப முடியவில்லை.

வண்டி கட்டுப்பாட்டை இழந்து கடற்கரைக்குள் நுழைந்து அங்கே இருந்த கான்கிரீட் கல் மீது மோத, இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நந்தினி உயிருக்கு போராட, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 12.மணி அளவில் நந்தினி இறந்து போனார். காயத்திரி பிழைத்துக் கொண்டார்.

இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், நந்தினியின் இரு சக்கர வாகனம் கல் மீது மோதியபோது, அதில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொதுப்பணித்துறை முன்னாள் ஊழியர் சேகர் என்பவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார். நந்தினியின் பைக் மோதியதில் சேகர் அதே இடத்தில் பலியானார்.

அப்போது அங்கே திரண்டிருந்த பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசார் தலையிட்டு கொள்ளையனை மீட்டு சென்றனர். கொள்ளையனிடம் இருந்து நந்தினியின் பணப்பை மீட்கப்பட்டது.

கொள்ளையனைவிரட்டிப் பிடிக்க முயற்சித்து உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் பிரேத பரிசோதனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.

அப்போது நந்தினியின் தந்தை வடிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனது மகள் நந்தினிக்கு அடுத்த மாதம் திருமண செய்ய திட்டமிட்டிருந்தேன். நிச்சயதார்த்தத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம்

எனது மகளின் திருமணத்தை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே.

அவளது சம்பளத பணத்தில் வீட்டு செலவுகளைகூட பார்த்துக் கொள்வாள்.

நந்தினி தனது தம்பி மீது ரொம்ப பாசம் கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு நல்ல வேலை தேடி கொடுக்க வேண்டுமென்பது அவளது ஆசையாக இருந்தது.

ஆனால் இப்போது, எங்களையெல்லாம் பரிதவிக்க விட்டு விட்டு சென்றுவிட்டாளே என்று கதறி அழுதார்.

Share This:
Loading...

Related Posts

Loading...