பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Share this post:

su

பாடசாலைக்குச் சென்று வரும் சிறுமியான மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி தயாக்கிய இரு பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனையும் தண்டமும் விதித்து மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளதுடன் குறித்த சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கன்னங்குடா பாவக் கொடிச்சேனையை சேர்ந்த பொன்னம்பலம் திருச்செல்வம் எனும் இரு பிள்ளைகளின் தந்தைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு 6 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

வயல்வெளிக்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் குறித்த மாணவியான சிறுமியை எதிரியான மாடு மேய்க்கும் தொழில் புரியும் பொன்னம்பலம் திருச்செல்வம் 23.11.2011 ஆம் காலப்பகுதியில் தனது மனைவி வீட்டிலில்லாத சமயம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினாரெனவும் பின்னர் மேலும் நான்கைந்து தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினாரெனவும் சிறுமியின் சாட்சியம் மூலம் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சம்பவங்கள் இடம்பெற்று 6 மாதங்களின் பின்னர் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பகிரங்கமானதைத் தொடர்ந்து சிறுமியின் சகோதரி சிறுமியை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்று பரிசோதித்த போது அவர் தாய்மை அடைந்திருந்தமை தெரியவந்துள்ளது.

இத்தகவலை மட்டக்களப்பு வைத்தியசாலை பொலிஸார் வவுணதீவு பொலிஸாருக்கும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து எதிரி கைது செய்யப்பட்டதுடன் எதிரிக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் 2013 ஆம் ஆண்டு எதிரி மீதான 6 குற்றச்சாட்டுக்களுடன் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்று வந்தது.

எதிரியான பொன்னம்பலம் திருச்செல்வம் தாம் சுத்தவாளியென எதிரிக்கூட்டிலிருந்து விசாரணையின் போது தெரிவித்த போதிலும் குறித்த சிறுமியின் சாட்சியம், சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் மற்றும் வவுணதீவு பதிவாளர் வழங்கிய 16 வயதுக்குட்பட்டவரே சிறுமி என்ற உறுதிப்படுத்தலையும் மன்று ஏற்றுக்கொண்டு எதிரியின் வாக்கு மூலத்தை நிராகரித்தது.

இதனடிப்படையில் எதிரிமீது சுமத்தப்பட்டிருந்த 6 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கவனத்திற் கொண்ட மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முதலிரு குற்றச்சாட்டுகளுக்கும் எதிரியை குற்றவாளியாகக் கண்டு தீர்ப்பு வழங்கியதுடன்,

ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான காலப்பகுதி பற்றிய சாட்சியத்தில் மன்றுக்கு சந்தேகமிருப்பதாகக் கூறி அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து எதிரியை விடுதலை செய்வதாகத் தீர்ப்பின் போது தெரிவித்தார்.

மேலும் எதிரியை குற்றவாளியாகக் கண்டு முதலாவது குற்றச்சாட்டுக்கு நீதிபதி 3 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் 5 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன்

தண்டம் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 6 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதேவேளை இரண்டாவது குற்றச்சாட்டுக்கு (பாலியல் துஷ்பிரயோகம்) 10 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் பத்தாயிரம் ரூபா தண்டமும் விதித்ததுடன்

சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ஈடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இதில் தண்டம் கட்டத் தவறினால் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் நஷ்டஈடு கட்டத்தவறினால் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் மேலதிகமாக அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இரு குற்றச்சாட்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தண்டனைகள் சமகாலத்தில் அன்றி வேறுவேறான காலப்பகுதியில் அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...