மாணவிகளுக்கு பாலியல் இம்சை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் ! யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

Share this post:

ilam

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்தாண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிணை மனு ஒன்று சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றின்போது, சமூக விரோதக்குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகையிலேயே நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு கடுமையாக எச்சரித்துள்ளார்.

பாடசாலை மாணவிகள் மீது பாலியல் வதை அல்லது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிப்பதற்கு தண்டனைச் சட்டக் கோவையின் 365 பிரிவில் சட்டம் பரிந்துரை செய்கின்றது.

16 வயதுக்குக் குறைந்த மாணவிகள், பாடசாலை வளாகத்தில் அரச கடமையில் உள்ள ஆசிரியர்களின் அதிகாரபூர்வமான கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அந்த மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது பாரதூரமான குற்றமாகும்.

இத்தகைய குற்றம் புரியும் ஆசிரியர்களுக்கு தண்டனைச் சட்டக் கோவையின் விதிகளுக்கு அமைவாக, 7 ஆண்டுகளில் இருந்து, 15 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மாணவிகள் அல்லது பதின்ம வயதுடைய சிறுமிகள் மீதான பாலியல் வதை குற்ற வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் வழக்குகளாகும்.

மாணவிகள் மீது குற்றம் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்படும் ஆசிரியர்கள் விசாரணைகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டால், அவர்களுக்கு ஈவிரக்கமின்றி, இவ்வாறாக கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வதை குற்றம் புரிந்த ஆசிரியரைக் காப்பாற்றுவதும் குற்றச் செயலாகவே கருதப்படும்.

சாட்சிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமானது, பாலியல் குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன், செயற்படுகின்ற அதிபர் ஆசியர்களை, தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிந்தவர்களாகவே கருதுகின்றது.

அதேநேரம், குற்றச் செயல் ஒன்று நடைபெற்றுள்ளது என தகவல் அல்லது முறைப்பாடு கிடைத்தவுடன், அதுபற்றி, பொலிசாருக்கு அறிவிக்காமல், அந்த ஆசிரியர் குற்றம் புரிந்ததாகக் கருதி, ஒழுக்காற்று விசாரணை நடத்துகின்ற அனைத்து உயர் அதிகாரிகளுக்கும், எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றச் செயல் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றின் மூலம் சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் வதை குற்றச் செயல்களை நீதிமன்றத்தில் நீதிபதிகளினாலேயே சமாதானமாக இணங்கி வைக்க முடியாத குற்றச் செயல் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

இச் சூழ்நிலையில் மாணவிகள் மீது பாடசாலை வளாகத்தில் பாலியல் வதை செய்யும் ஆசிரியர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல், பாரிய சிறைத் தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொண்டும்,

பொலிசார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு அறிவிக்காமல், அதிபர், ஆசிரியர், பழையமாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன ஒன்றிணைந்து சமாதானமாக இணங்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, குற்றச் செயல்களுக்கு உதவியாக உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

குற்றச்செயல்களை மறைப்பதற்கு உதவியாக – உடந்தையாக இருந்தமை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பாலியல் வதை குற்றம் தொடர்பிலான தண்டனைகள் பற்றியும் குற்றச் செயலின் தன்மை பற்றியும் குறிப்பிட்ட நீதிபதி இத்தகைய சந்தர்ப்பங்களில் சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...