யாழில் ஓடும் பேரூந்தினுள் நடக்கும் தகிடு தத்தம்…!!

Share this post:

jaffnabus

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேரூந்தினுள் நடக்கும் தகிடு தத்தம் – ஜெரா!! இடம் – யாழ்ப்பாணம். சம்பவம் – ஏதாவது ஒரு பஸ்ஸில் பயணம். சத்தம் – “…ராத்திரி நேரத்து பூஜையில்…”

(எல்லா பஸ்காரரும் எங்கயிருந்துடா இப்பிடி ஒரே மாதிரியான பாட்டுகள வாங்குவாங்கள் என்னும் சந்தேகம் எனக்குப் பலமாகவே உண்டு)
காலம் – நெரிசல் மற்றும் அவிச்சல் பொழுது

1. வயோதிபர்

“…வாங்கோ.. வாங்கோ.. தாராளமா சீற் இருக்கு..ஏறுங்கோ.. உள்ள ஏறுங்கோ”

“இந்த பஸ்ல சீற் இல்ல. அடுத்த பஸ்ல போவம்…முணுமுணுத்துக்கொண்டே ஓரமாக ஒதுங்கி நிற்கும் வயோதிபரையும் கையைக் கொடுத்து லாவகமாகத் தூக்கி ஏற்றிக்கொள்கிறார் நடத்துனர்.

“..எங்க சீற்..”

“..முன்னுக்குப் போங்கோ..வேகமா முன்னுக்குப் போங்கோ. உதில ஆக்கள் இறங்கினதும் உங்களுக்குத்தான் அந்த சீற்..”

“மிச்சக்காசு”

“அந்த இடத்துக்கு 60 ரூபாதான் மற்ற பஸ் எடுக்கிற”

“அப்பிடியெண்டா அந்த பஸ்ல ஏறுங்கோ. இறக்கிவிடவோ. இப்ப.. இந்த இடத்தில இறக்கிவிடவோ” ( இடியமீன் தொனியில்)

“?” வயோதிபர்.

2. பள்ளிக்கூட பிள்ளையள்
“வேகமா ஏறோணும். ஏறுங்கோடா. முன்னுக்கு ஓடுங்கோடா.” (நிமிரவே முடியாமல் புத்தகப் பையை இழுத்துக்கொண்டு பிள்ளைகள் முன்னுக்கு நெரிபட்டு செல்வர்.)

“எங்க காசு. எல்லாரும் காசு எடுங்கோ” (பிள்ளைகளின் விழிகள் பிதுங்கும். சில பிள்ளைகள் அந்தக் காலத்தில ஆமிக்காரன் வழிமறித்து ஐ.சி கேட்கும்போது உண்டாகும் பீதியை ஒத்த உணர்வுடன் புத்தகப் பையினுள் கையவிட்டு, சீசன் ரிக்கெற்றை எடுப்பர்)

“உங்களுக்கு எத்தின நாள் சொல்றது சீசன் ரிக்கெற்றோட இந்த பஸ்ல ஏறக்கூடாதெண்டு. மாடுகள். கொப்பன் கோத்தைக்கு காசு குடுத்துவிட வேணும் எண்ட அறிவில்லையே. எல்லாரும் இப்ப 5 ரூபா எடுக்கோணும். இல்லாட்டி இதில இறக்குவன் (அதே இடியமீன் தொனியில்).

இவ்வள தமிழ் வார்த்தைகளும் பேசி முடிக்கையில் பள்ளிக்கூடம் வந்திருக்கும். அவமானப்பட்ட முகங்களோட பிள்ளைகள் பாடசாலைக்குள் நுழைவர்.

3. பெண்கள்
இளம்பெண்களுக்கு எப்போதும் வாகன சாரதிக்குப் பின்னுள்ள ஆசனம் வழங்கப்படும். கர்ப்பிணித் தாய்மார், மத தலைவர்களுக்கு அதற்கு அடுத்துள்ள ஆசனம்தான். இது பேருந்து நடத்துனரின், ஓட்டுநரின் தனிப்பட்ட சட்டம்.

“குழந்தப் பிள்ளையோட ஏறுற அக்காவுக்கு ஆம்பிளையள் ஒரு சீற் குடுங்கோ”

ஆம்பிளையள் எல்லாரும் இறுக்கி கண்ணை மூடி குறட்டை விட்டுத் தூக்கம்.

“சீ..மனச்சாட்சியே இல்லையா..” இன்னொரு பெண் முணுமுணுத்தபடி எழும்பி அவருக்கு சீற் வழங்குவார்.

தொப்பையில்லாத நிமிர்ந்த தோற்றம். நீளக் கை சேட் முழுவதுமாக மடித்து, சண்டியர் போன்ற விறைப்பு. பார்வையில் முறைப்பு. மீசை முழுவதுமாக மழிப்பு என்ற ரகத்தில் சிலர் பஸ்ஸில் ஏறுவர். இவர்களுக்கு பின் பக்கம் புண் போல. சீற் இருந்தாலும் குந்த பிடிக்காது. இளம்பெண்கள் இருக்கும் சீற்றோடு சரிந்து நின்றபடி, தொலைபேசியை நோண்டிக்கொண்டிருப்பர். இடையிடையே அந்தப் பெண்களில் தேய்ப்பர்.

அப்படித்தான் அன்றொரு நாள். ஒரு இளம் குடும்பப் பெண் மீது சரிந்து நின்று கொண்டிருந்தார் ஒரு சண்டியன். “சீற் இருக்கு. இருங்கோ” என்றார் நடத்துனர். செவிடன் போல நின்றான் அந்தச் சண்டியன். கிளிநொச்சி வந்தது. இறங்கிப் போகும்போது, பேப்பர் துண்டில் தன் தொலைபேசி இலக்கத்தை எழுதி, அந்தப் பெண்ணின் கையில் போட்டுவிட்டுப் போகிறான் அந்தச் சண்டியன்.

அதை அருகுச் சீற்றில் இருந்தபடி அவதானித்து வந்த ஒருவர் அவதானித்துவிட்டு, பொங்கியெழுந்தார்.
“நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன். அவன் யார் பிள்ள. ஏன் பேசாம இருந்தனீ. எனக்கு ஒரு வார்த்த சொல்லியிருந்தா, அவன இதிலயே போட்டு உழக்கியிருப்பன்”
“நான் எப்பிடி சொல்றது?” அந்த இளம்பெண்.

“ நீர் பிரச்சினைய சொல்லாமல் நான் எப்பிடி அவனுக்கு அடிக்கிறது. பிறகு அவன் ஒண்டும் செய்யேல்ல எண்டு நீர் சொல்லீற்றா, என்னைக்கொண்டு போய் உழக்குவாங்கள்..”

காற்றில் பறக்கும் மற்றைய பேருந்தை மடக்கிவெட்டி முந்துவதற்காக ஓட்டுநர் அடித்த பிரேக்கில், அந்த நம்பர் எழுதிய காகிதத் துண்டு காற்றில் பறந்து வெளியே போய்விட்டது.

4. சச்சரவுகள்
பின் வாங்கிய – ஏற்கனவே முன் சென்றுகொண்டிருந்த பேருந்துக்காரன், இன்னும் வேகமாக அமத்தி, இந்தப் பேருந்துக்கு சமனாய் வந்துவிடுவான்.

“..ஏய் சக்கிளிய நாயே…”(பின்னர் தூய தூசணத் தமிழ்)

“நீ இப்பிடி ஓடினா நாங்கள் என்ன …………இறங்குடா. நிப்பாட்டீற்று இறங்குடா..இப்ப உன்னை வெட்டுவன் இறங்குடா”

பதிலுக்கு இந்தப் பேருந்துக்காரனும், நடத்துனரும் நாலு தூசணம் பேச, பேருந்துக்குள் இருந்த குழந்தைகள் எல்லாம் அவர்களுக்கிடையிலான வார்த்தைகளுக்கு சொல்லகராதி விளக்கம் கேட்கத் தொடங்கிவிடுவர்.

சண்டை முற்றி, “பஸ்ஸ பொலிஸ் ஸ்ரேசனுக்கு விடு. அங்க கதைப்பம்” என்ற முடிவோடு, இரு பேருந்துக்காரரும் பொலிஸ் நிலைய வாசலில் குத்தி ப்ரேக் அடித்து நிறுத்துவர்.
அடுத்து வரும் நிமிடங்களில் இரண்டு பேருந்துகளின் நடத்துனர்களும், ஓட்டுனர்களும் மின்னல் வேகத்தில் முறையிடுவர். தங்களிடமுள்ள ஆவணங்களையெல்லாம் மாறிமாறி எடுத்துக் காட்டுவர். 30 நிமிட பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், இருவரும் வெளியில் வந்து, தத்தம் பேருந்துகளை எடுத்துக்கொண்டு, மீளவும் பறப்பர்.

தங்கி நின்ற அரைமணிநேர இடைவெளியில் “நான் அப்பவே சொன்னன் இந்த மனுசனுக்கு அந்த பஸ்ஸில ஏறுவம் எண்டு. கேட்டியளே..” கணவன்மாரின் காதுகள் ஒருபக்கம் கிழிய, ச்சீ..அந்த பஸ்ல ஏறியிருக்கலாம். இன்னேரம் வீட்ட போயிருக்கலாம்” என்று சராசரியானவர்களின் முணுமுணுப்புக்களாலும் பேருந்து நிரம்பியிருக்கும்.

5. மிச்சக்காசு
“தம்பி இறங்கப்போறன் மிச்சக்காசு” சீற்றில் இருந்தபடியே ஒரு குரல் அலைபோல ஒங்கியெழும். “இறங்குறதெண்டா எழும்பிவாரும்” நடத்துனரின் குரல் சுனாமிபோல மீள அடிக்கும்.
“நான் பளையில தான் இறங்கவேணும். இப்பத்தானே கிளிநொச்சில போகுது பஸ்”, மிச்சக்காசு கேட்டவர்.

“நானும் அதைத்தான் சொல்லுறன். பளையில இறங்குறதெண்டால் கிளிநொச்சியில எழும்பி, முன்னுக்குப் போகவேணும். அப்பத்தான் சனத்த விலத்திக்கொண்டு முன்னுக்குப் போகலாம்”, நடத்துனர்.

“இறக்கம்…இறக்கம். மிச்சக்காச தாரும் ஐசே”, மிச்சக்காசுக்காரர்.

“அந்த 5 ரூபா மிச்சக்காசுக்கு இவ்வள பாடுபடுறியள்”, நடந்துனர்.

“ஆ..அதே 5 ருபாவுக்கு பள்ளிக்கூடப் பிள்ளையள நீங்க என்ன பாடுபடுத்தினியள்” மிச்சக்காசு கேட்டவரை எட்டி உதைத்தற்கு சமனான நிலையில் தள்ளி இறக்கிவிட்டு அப்பேருந்து பறக்கும்.

இப்பிடியாக, ஏகப்பட்ட அனுபவங்களைப் பெறவேண்டுமெனில், வடக்கில் ஓடும் ஒரு பேருந்துக்குள் தொற்றிக்கொள்ளுங்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...